"தமிழ்நாட்டிற்கு அடுத்த 2 நாட்களுக்கு ரெட் அலர்ட்" - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்!
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வரும் நிலையில், அடுத்த 2 நாட்களுக்கு தமிழ்நாட்டிற்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்தது. அதிலும் வெப்பஅலை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் சுமார் 110 டிகிரிக்கு மேல் வெப்பம் பதிவாகி இருந்தது. ஈரோடு போன்ற மாவட்டங்களில் 112 டிகிரி அளவுக்கு வெயில் வாட்டி வதைத்து வந்தது. சென்னையில் 105 டிகிரிக்கு உள்ளாகவே வெயில் இருந்து வந்தது. எனினும் வெப்ப அலை கடுமையாக இருந்த காரணத்தினால் மக்கள் அனைவரும் கடுமையாக அவதி அடைந்து வந்தனர்.
இதனிடையே, கோடை மழையும் வெப்ப அலையும் சேர்ந்து இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் சார்பில் அறிவிப்பு வெளியானது. அதேபோல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மிதமானது முதல் கனமழை பெய்து வந்தது. சென்னையில் கடந்த சில நாட்களாகவே ஒரு சில பகுதிகளில் மட்டுமே லேசான மழை பெய்து வந்தது. இதன் காரணமாக கோடை வெப்பம் தணிந்து சில பகுதிகளில் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. குறிப்பாக, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது.
இதையடுத்து, மே 31ம் தேதி கேரளாவில் தென் மேற்கு பருவமழை தொடங்கபோவதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்தது. அதன் முன்னோட்டமாக மே 20ம் தேதி கேரளாவில் மிக மிக கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் 20ம் தேதி அங்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள் : ராமர் கோயில் குறித்த பிரதமர் மோடியின் சர்ச்சை பேச்சு – தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் கோரிக்கை!
இந்நிலையில்,தென்மேற்கு வங்கக் கடலில் வரும் 22ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து அது வடகிழக்கு திசையில் நகர்ந்து 24ஆம் தேதி வாக்கில் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதனால், வருகின்ற 19, 20, ஆகிய 2 நாட்கள் தமிழ்நாட்டில் அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறி தமிழ்நாட்டிற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், மே 18, 21 மற்றும் 22 ஆகிய 3 நாட்கள் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்டை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.