சாதனை படைத்த ஐசிசி உலக கோப்பை 2023 இறுதிப்போட்டி!
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் பங்கேற்ற உலகக்கோப்பை 2023 இறுதிப்போட்டி, உலகம் முழுவதும் நேரலையில் ஒரு லட்சம் கோடி நிமிடங்கள் பார்வையாளர்களை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகக் கோப்பை இறுதிப்போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நவ. 19-ம் தேதி நடைபெற்றது. இதில், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 240 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியா டிராவிஸ் ஹெட் மற்றும் மார்னஷ் லபுஷேன் அதிரடியால் 43 ஓவர்களில் 241 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று 6வது முறையாக டிராபியை கைப்பற்றியது.
ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா 2011 போல கோப்பையை வெல்லும் வாய்ப்பை ஆஸ்திரேலியாவிடம் தோற்று நழுவ விட்டது. குறிப்பாக லீக் மற்றும் நாக் அவுட் சுற்றில் தொடர்ந்து சிறப்பாக விளையாடி 10 போட்டிகளிலும் வெற்றிகளை பெற்ற இந்திய அணியில் அனைத்து வீரர்களும் உச்சகட்ட ஃபார்மில் இருந்ததால் இம்முறை வெற்றி உறுதி என்று ரசிகர்கள் நம்பினர்.
இந்நிலையில் உலகக்கோப்பை இறுதி ஆட்டம் குறித்த தரவு ஒன்றை ஐசிசி வெளியிட்டுள்ளது. அதன்படி, இதுவரை நடைபெற்ற கிரிக்கெட் போட்டிகளில், 2023 உலகக்கோப்பை இறுதிப்போட்டியே மிகப்பெரிய நிகழ்வு என குறிப்பிட்டுள்ளது. அதன்படி, உலகம் முழுவதும் நேரலையில் ஒரு லட்சம் கோடி நிமிடங்கள் பார்வையாளர்களை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த 2011-ம் ஆண்டு ஒளிபரப்பப்பட்ட தொடரை விட 38% அதிக பார்வையாளர்கள் என குறிப்பிட்டுள்ளது.
The ICC Men’s Cricket World Cup 2023 in India is the biggest-ever ICC event, smashing records in both Broadcast and Digital 💥#CWC23 | Details 👇https://t.co/E148DQbQoE
— ICC (@ICC) December 27, 2023
அதேபோல், ஐசிசியின் அதிகபட்ச பார்வையாளர்களை பெற்ற ஒரே போட்டி என்ற பெருமையை, இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இறுதிப் போட்டி பெற்றுள்ளது. மொத்தமாக 8760 கோடி பார்வையாளர்களை கொண்டு பதிவு செய்துள்ளது.
மேலும் டிஸ்னி ஸ்டார் நெட்வொர்க்கில் மட்டும் 42,200 கோடி பார்வையாளர் நிமிடங்கள் பெற்று, 2011-ம் ஆண்டை விட 54% அதிக பார்வையாளர்களை பெற்றுள்ளது. 1690 கோடி பேர் இந்த போட்டியின் வீடியோக்களை பார்த்துள்ளனர். அனைத்து வீடியோக்களையும் பார்த்தவர்கள் எண்ணிக்கை 158% அதிகரித்துள்ளதாகவும், இதன்மூலம் 20 ஓவர் உலகக் கோப்பை சாதனையை முறியடித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.