டங்ஸ்டன் சுரங்கம் அமையும் இடம் மறு ஆய்வு - மத்திய அரசு தகவல்!
டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க பல்லுயிர் பகுதிகளை விட்டு விட்டு எஞ்சிய இடங்களை மறு ஆய்வு செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
மதுரை நாயக்கர்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டது. பல்லுயிர் தளமான அப்பகுதியில் சுரங்கம் அமைக்க கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், அப்பகுதியை மறு ஆய்வு செய்ய மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது. அதாவது பல்லுயிர் பகுதிகளை விட்டு விட்டு எஞ்சியுள்ள இடங்களை மறு ஆய்விற்கு உட்படுத்த அறிவுறுத்தியுள்ளது.
மேலும் சுரங்கத்திற்கான ஏலம் நடைபெறும் போது தமிழ்நாடு அரசு எதிர்ப்பை பதிவு செய்யவில்லை என்றும் சுட்டிக் காட்டியுள்ளது. இதுதொடர்பாக மத்திய சுரங்க அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது;
நாயக்கர்பட்டி டங்ஸ்டன் சுரங்கம் கடந்த பிப்ரவரி 2024ல் இது ஏலத்திற்கு முன்மொழியப்பட்டது. இச்சுரங்கம் ஏலத்திற்கு முன்பு தமிழ்நாடு அரசிடமிருந்து விவரங்கள் கோரப்பட்டன. இதனையடுத்து 07.11.2024 அன்று இந்துஸ்தான் ஸிங்க் லிமிடெட் நிறுவனதரதுக்கு ஏலம் விடப்பட்டது. கடந்த பிப்ரவரியில் ஏலத்திற்கு முன்மொழியப்பட்டது முதல் 07.11.2024 அன்று ஏலத்தின் முடிவு அறிவிக்கப்படும் வரை, எதிர்ப்பு இருப்பது குறித்து தமிழ்நாடு அரசிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை.
மேலும் அந்த சுரங்க ஏலத்தை கைவிடுமாறு மத்திய அரசிடம் தமிழ்நாடு அரசு எந்த கோரிக்கையும் வைக்கவில்லை. டங்ஸ்டன் சுரங்கத்திற்கான ஏலதாரர் அறிவிக்கப்பட்ட பின்னர், அந்த சுரங்கம் அமையவுள்ள இடத்தில் பல்லுயிர் பாரம்பரிய தளம் உள்ளது என்ற அடிப்படையில், இந்த சுரங்கத்தை ஏலத்துக்கு விடுவதற்கு எதிராக பல கோரிக்கைகள் வந்தன.
கோரிக்கைகளின் அடிப்படையில் இந்திய புவியியல் ஆய்வு மையம் பல்லுயிர் பகுதிகளை விட்டுவிட்டு, எஞ்சியுள்ள இடங்களை மறு ஆய்விற்கு உட்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், நாயக்கர்பட்டி டங்ஸ்டன் சுரங்க ஏலதாரருக்கு ஒப்பந்த கடிதம் வழங்கும் பணியை தற்காலிகமாக நிறுத்தி வைக்க தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.