“மனித வெடிகுண்டாக மாறி பாகிஸ்தான் செல்ல தயார்” - கர்நாடக அமைச்சர் பரபரப்பு பேட்டி!
பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு, இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிழவி வருகிறது. இதனிடையே அந்தந்த நாட்டு அரசியல் தலைவர்கள் வார்த்தை போரில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் அண்மையில் பாகிஸ்தான் அரசியல் கட்சித் தலைவர் பிலாவல் பூட்டோ சர்தாரி, சிந்து நதி பாகிஸ்தானில் பாயவில்லை என்றால் அவர்களின்(இந்தியர்களின்) ரத்தம் பாயும் என்று பேசினார்.
அவரைத் தொடர்ந்து பாகிஸ்தான் அமைச்சர் ஹனிஃப் அப்பாசி, 130 அணு ஆயுதங்களை காட்சி பொருளாக வைத்திருக்கவில்லை என்று பகிரங்கமாக இந்தியாவுக்கு மிரட்டல் விடுத்தார். அந்த வரிசையில் தற்போது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கர்நாடக மாநில அமைச்சர் ஜமீர் அகமது கான் பாகிஸ்தான் மீது தாக்குதல் செய்ய தயாராக இருப்பதாக பரபரப்பு பேட்டியளித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசியதாவது, “நாம் அனைவரும் இந்தியர்கள், இந்துக்கள். நமக்கும் பாகிஸ்தானுக்கும் எந்த ஒரு சம்பந்தம் இல்லை. பாகிஸ்தான் எப்போதும் இந்தியாவின் எதிரியாகவே இருந்து வருகிறது. பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் என்னை அனுமதித்தால், நான் பாகிஸ்தானுக்கு சென்று மனித வெடிகுண்டாக மாறி தாக்குதலைத் தொடங்கத் தயாராக இருக்கிறேன்” என்றார்.
அவர் சொன்னதை கேட்டு அருகில் இருந்தவர்கள் சிரித்த நிலையில், ”நான் இதை நகைச்சுவையாகவோ அல்லது வேடிக்கையாகவோ சொல்லவில்லை, சீரியஸாக பேசுகிறேன். பஹல்காம் தாக்குதல் காட்டுமிராண்டித்தனமான மனிதாபிமானமற்ற செயல். நாம் இந்தியர்களாக ஒன்று சேர வேண்டும்”
இவ்வாறு அமைச்சர் ஜமீர் அகமது கான் தெரிவித்துள்ளார்.