"மேகதாது பணிகளை உடனே தொடங்க தயார்" - முதலமைச்சர் சித்தராமையா பேட்டி!
கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மலை மாதேஸ்வர கோயிலில் நேற்று ஸோய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது,
"பயங்கரவாதிகளை ஒடுக்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உள்ளது. பயங்கரவாத செயலை வன்மையாக கண்டிக்கிறேன். புல்வாமா தாக்குதலும் அதே மாவட்டத்தில் தான் நடந்துள்ளது. மத்திய அரசு அங்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டும். மத்திய அரசின் உளவுத்துறை தோல்வி அடைந்துள்ளது. சம்பவம் நடைபெற்ற பிறகு நடவடிக்கை எடுப்பது வேறு.
சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பது தன முக்கியம். இதை மத்திய அரசு செய்திருக்க வேண்டும். புல்வாமாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். தற்போது பொதுமக்கள் 26 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவம் நடைபெறாமல் தடுத்திருக்க வேண்டும். இனி இத்தகைய சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க வேண்டியது அவசியம். பயங்கரவாதிகள் எந்த மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, அவர்களை ஒடுக்க வேண்டியது மத்திய அரசின் பொறுப்பு. அதற்கு தேவையான ஒத்துழைப்பை நாங்கள் வழங்க தயாராக உள்ளோம்.
மத்திய அரசு ஒப்புதல் வழங்கினால் மேகதாது திட்ட பணிகளை உடனே தொடங்க தயாராக உள்ளோம். இதுகுறித்து பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை நேரில் சந்தித்து பேசியும் எந்த பலனும் இல்லை. பத்ரா மேலணை திட்டத்திற்கு ரூ.5 ஆயிரத்து 300 கோடி வழங்குவதாக மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை அந்த நிதியை வழங்கவில்லை. இது அரசியல் பழிவாங்கும் செயல் ஆகும்" என்று தெரிவித்துள்ளார்.