“துணைப் பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்ய தயார்” - மல்லை சத்யா!
மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக எம்பியும், வைகோவின் மகனுமான துரை வைகோ நேற்று அறிவித்தார். மதிமுகவின் துணைப் பொதுச் செயலாளராக உள்ள மல்லை சத்யாவுக்கும், துரை வைகோவிற்கும் இருக்கும் மன கசப்புதான் இந்த விலகலுக்கு காரணம் என கூறப்பட்டு வரும் நிலையில், இது அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இன்று சென்னை எழும்பூரில் உள்ள மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக கழகத்தின் தலைமை அலுவலகமான தாயகத்தில் அக்கட்சியின் நிர்வாகக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளர், துணை பொதுச் செயலாளர், முக்கிய பொறுப்பாளர்கள் என பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பேசிய மல்லை சத்யா,
“நிர்வாகிகள் மூலம் வாக்கெடுப்பு நடத்தி என்னை கட்சியை விட்டு விலக்கி விடுங்கள். துணைப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நான் ராஜினாமா செய்கிறேன். கடைசி வரை வைகோ தொண்டனாக இருந்து விட்டுப் போகிறேன். துரை வைகோ அரசியல் வரவேண்டும் என்று முதன் முதலில் கூறியது நான்தான்.
கட்சி விரோத நடவடிக்கையில் நான் ஈடுபடவில்லை. அப்படி ஏதாவது கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதை நிரூபித்தால் என் மீது நடவடிக்கை எடுக்கலாம். கட்சிக்கு எதிராக சமூக வலைதளங்களில் பேசுவது தான் இங்கு முக்கிய பிரச்சனையாக உள்ளது” என தெரிவித்தார்.
மல்லை சத்யாவை தொடர்ந்து பேசிய துரை வைகோ,
“கட்சி நலனுக்காகதான் பொறுப்புகளில் இருந்து ராஜினாமா என்று முடிவு செய்தேன். தொண்டர்கள், நிர்வாகிகள் வற்புறுத்தல் காரணமாக தான் நான் கட்சி பணிகளில் செயல்பட தொடங்கினேன். மதிமுக தொண்டர்கள் அனைவரும் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறேன்” எனப் பேசினார்.
இதனைத்தொடர்ந்து நிர்வாக குழுக் கூட்டத்தில் துரை வைகோ சமாதானப்படுத்தப்பட்டார் என தகவல்கள் வெளியாகி உள்ளது. நிர்வாகிகள் வலியுறுத்தலையடுத்து தன்னுடைய ராஜினாமாவை துரை வைகோ திரும்ப பெற உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த கூட்டத்தில் பேசிய 66 மாவட்ட செயலாளர்களில் துரை வைகோவிற்கு 40 மாவட்ட செயலாளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.