"பாஜகவுடன் கூட்டணிக்கு வந்தால் அதிமுகவுடன் சேர தயார்" - #TTVDhinakaran பரபரப்பு பேட்டி
பாஜகவுடன் கூட்டணி அமைத்தால் நான் அதிமுகவை ஏற்றுக் கொள்ள தயாராக உள்ளேன் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
மதுரை கோச்சடையில் உள்ள தனியார் விடுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கலந்துக்கொண்டு சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்களுடன் ஆலோசனை
நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் பேசியதாவது,
"மத்திய அரசு கொண்டு வந்துள்ள 'ஒரே நாடு ஒரே தேர்தல்' சட்டம் எப்போது நடைமுறைக்கு வரும் என தெரியவில்லை. ஒரே நாடு ஒரே தேர்தல் முறையால் மத்திய அரசோ, மாநில அரசோ கவிலும் வாய்ப்புள்ளது. புயல், வெள்ள பாதிப்பின் போது மத்தியக்குழு ஆய்வுக்கு வருவதற்கு முன்னதாகவே மத்திய அரசின் நிதி தமிழ்நாட்டிற்கு வந்தது. மத்திய அரசு அதிமுகவை அழிக்க வேண்டும் என நினைக்கவில்லை. தமிழ்நாட்டில் அதிமுக பலமாக இருக்க வேண்டும் என்றே
பாஜக நினைக்கிறது.
எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக கட்சிக்குள்ளேயே எதிர்ப்புகள் வந்து விட்டன. அதிமுக உறுப்பினர்களிடம் இருந்து எடப்பாடி பழனிசாமி தன்னை காப்பாற்றி கொள்ள வேண்டும். எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகளை பார்க்கும்போது 2026 க்கு பிறகு அதிமுக இருக்குமா? என்ற கேள்வி எழுகிறது. சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர் தேசிய ஜனநாயக கூட்டணியில் இன்னும் பல அரசியல் கட்சிகள் இணைய உள்ளன.
தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று கூட்டணி ஆட்சி அமைக்கும். எடப்பாடி பழனிசாமிக்கு தேர்தல் ஆணையத்தால் கிடைத்தது தற்காலிகமான வெற்றியாகவே உள்ளது. அதிமுக பாஜகவுடன் இணைந்து தேர்தலை சந்தித்தால் தான் வெற்றி பெற முடியும். பாஜகவுடன் கூட்டணி அமைத்தால் நான் அதிமுகவை ஏற்றுக் கொள்ள தயாராக உள்ளேன். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் காலத்தின் கட்டாயத்தினால் நான் அரசியலுக்கு வந்தேன்"
இவ்வாறு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.