‘ஆர்எஸ்எஸ்க்கு மீண்டும் செல்ல தயார்’ - பிரிவு உபசார விழாவில் நீதிபதி பேச்சு!
‘ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கு செல்ல தயார்’ என தனது பிரிவு உபசரிப்பு விழாவில் நீதிபதி சித்த ரஞ்சன் தாஸ் தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்தவர் சித்த ரஞ்சன் தாஸ். முன்னதாக ஒடிசா நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்த இவர் கடந்த 2022ஆம் ஆண்டில் கொல்கத்தா நீதிமன்றத்தில் நீதிபதியாக மாற்றப்பட்டார். சுமார் 14 ஆண்டுகளாக அங்கு நீதிபதியாக பணிபுரிந்த அவர் நேற்று ஓய்வு பெற்றார். இதற்காகக் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் கலந்து கொண்ட பிரிவு உபசார விழா நடைபெற்றது.
அப்போது நீதிபதி சித்த ரஞ்சன் தாஸ் பேசியதாவது:
“நான் ராஷ்ட்ரிய சுயம்சேவாக் சங்கத்தின் (RSS) உறுப்பினராக இருந்தேன் என்பதை இங்கே சொல்லிக் கொள்கிறேன். நான் அந்த அமைப்புக்கு நிறைய கடமைப்பட்டிருக்கிறேன். என் குழந்தைப் பருவத்தில் இருந்து என் இளமைக் காலம் வரை அந்த அமைப்பில் தான் இருந்துள்ளேன். எனது முன்னேற்றத்திற்காக ஒருபோதும் அமைப்பயோ, அமைப்பின் உறுப்பினரையோ பயன்படுத்தவில்லை. ஏனெனில் அது கொள்கைகளுக்கு எதிரானது.
பணக்காரரோ, ஏழையோ, கம்யூனிஸ்டோ, பாஜக, காங்கிரஸ் அல்லது திரிணாமுல் காங்கிரஸோ என எந்த அமைப்பாயினும், யாராயினும் அனைவரையும் சமமாகவே நடத்தினேன். என் முன் அனைவரும் சமம். நான் யாருக்காகவும் அல்லது எந்த அரசியல் தத்துவத்திற்காகவும் எந்த சார்பையும் கொண்டிருக்கவில்லை. வாழ்க்கையில் எந்த தவறும் செய்யாததால், நான் ஆர்எஸ்எஸ்-ஐ சேர்ந்தவர் என தைரியமாக கூறிக் கொள்கிறேன். நான் எல்லா சூழல்களிலும் நேர்மையாகவே நீதி வழங்க முயன்றுள்ளேன். நீதியை நிலைநாட்டச் சட்டம் வளையலாம்.. ஆனால் சட்டத்திற்கு ஏற்ப நீதியை வளைக்க முடியாது.
இப்போது எதாவது உதவி அல்லது பணிக்காக என்னை அழைத்தால் ஆர்எஸ்எஸ் அமைப்பிற்குச் செல்ல தயார்” என கூறியுள்ளார்.