“தமிழக எம்பிக்கள் குறித்து பேசியதற்கு 100 முறை மன்னிப்பு கேட்கத் தயார்” - மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்!
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தொடரில் நேற்று பேசிய திமுக எம்பிக்கள் புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். புதிய கல்வி கொள்கை திட்டத்தில் தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்றும் மாறாது என தெரிவித்திருந்தனர்.
இதற்குப் பதிலளித்துப் பேசிய மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், “புதிய தேசிய கல்விக்கொள்கை பற்றிய சரியான புரிதல் தமிழ்நாட்டிற்கு இல்லை. பிஎம்ஸ்ரீ திட்டத்தில் சேர்வதாக தமிழ்நாடு கூறிய நிலையில் திடீரென நிலைப்பாட்டை மாற்றியது ஏன்? தேசியக் கல்விக் கொள்கை திட்டத்தில் கையெழுத்திட தமிழ்நாடு முன்வந்தபோது சூப்பர் முதலமைச்சர் அதனைத் தடுத்துவிட்டார். தமிழ்நாடு மாணவர்களின் எதிர்காலத்தை தமிழ்நாடு அரசு வஞ்சிக்கிறது” என்று பேசினார்.
மேலும் “திமுகவினர் அநாகரீகமானவர்கள், ஜனநாயகம் இல்லாதவர்கள். தமிழ்நாட்டு மாணவர்களின் நலனில் அக்கறை இல்லாமல் இருக்கிறார்கள். மாணவர்களின் எதிர்காலத்தை சீரழிக்கிறார்கள். தமிழ்நாட்டு மக்களிடம் அவர்கள் நேர்மையாக இல்லை” என்றுப் பேசினார்.
இதற்கு திமுக எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன் மத்திய அமைச்சருக்கு எதிராக முழக்கமிட்டனர். மத்திய அமைச்சர் பேசியது வருத்தமளிப்பதாக திமுக எம்.பி. கனிமொழி கூறினார். இதையடுத்து தான் பேசியது புண்படுத்தியிருந்தால் அதனை திரும்பப் பெற்றுக்கொள்வதாக மக்களவையில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.
தொடர்ந்து இவரின் பேச்சுக்கு பல தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்த நிலையில், தமிழ்நாடு எம்பிக்களின் மனம் புண்பட்டிருந்தால் 100 முறை மன்னிப்பு கேட்கத் தயார் என இன்று மாநிலங்களவையில் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
இன்று மாநிலங்களவையில் பேசிய அவர்,
“எனது தாய் தமிழகத்தைச் சேர்ந்தவர். நான் தமிழகத்தின் மைந்தன். யார் மனதையாவது புண்படுத்தி இருந்தால் 100 முறை மன்னிப்பு கேட்கிறேன். யார் மனதையும் புண்படுத்த வேண்டுமென்பது என் நோக்கம் இல்லை. யாருக்கான நிதியையும் நிறுத்தும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை. கடந்த ஓராண்டுக்கு முன்பு 5 முறை தமிழக முதலமைச்சருக்கு கடிதம் எழுதி உள்ளேன். எனக்கு தமிழக தலைமை செயலாளர் ஒரு பதில் கடிதம் அனுப்பினார். தமிழகத்தில் உயர்தர கல்வியை தர தயாராக இருப்பதாக தலைமை செயலாளர் எழுதி இருந்தார்.
இந்த அரசு தமிழுக்கு எதிரானது இல்லை. திருக்குறளை பல்வேறு மொழிகளில் மொழி பெயர்க்க இந்த அரசு தான் நடவடிக்கை எடுத்து உள்ளது. தமிழ் தான் உலகின் மூத்த மொழி என்பதை மத்திய அரசு பல இடங்களில் கூறியுள்ளது.
சட்டமன்றத்தில் ஜெயலலிதாவுக்கு என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். அப்படிப்பட்டவர்கள் எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம்” எனப் பேசினார்.