புத்தகக் காட்சியில் "சென்னை வாசிக்கிறது" நிகழ்ச்சி - பபாசி நிர்வாகிகள் தகவல்!
சென்னை நந்தனத்தில் நடைபெற்று வரும் புத்தகக் காட்சியில் முதன்முறையாக "சென்னை வாசிக்கிறது" என்ற பெரிய அளவிலான வாசிப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
47 ஆவது சென்னைப் புத்தகக்காட்சி ஜனவரி 3ம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறுகிறது. இப்புத்தகக்காட்சியை விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இப்புத்தகக்காட்சியினை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் விதமாக ஜனவரி 8ஆம் தேதி திங்கட்கிழமை காலை 9 மணி முதல் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் அமைந்துள்ள புத்தகக்காட்சி வளாகத்தில் 'சென்னை வாசிக்கிறது' என்னும் நிகழ்வு நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கான பள்ளி கல்லூரி மாணவர்கள் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கின்றனர்.
இதையும் படியுங்கள் : மரணத்திலும் இணைபிரியாத தம்பதி - கணவன் இறந்த துக்கம் தாங்காமல் மனைவியும் இறந்த சோகம்..!
இது குறித்து பபாசி நிர்வாகிகள் தரப்பில் கூறியதாவது;
"வாசிப்பு நிகழ்ச்சிக்காக பள்ளிக்கல்வித்துறை அமைச்சரிடம் ஒப்புதல் பெற்று முதன்மை கல்வி அலுவலரிடம் தெரிவித்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மட்டுமின்றி கல்லூரி மாணவர்களும் எந்தவித கட்டுப்பாடும் இன்றி கலந்து கொள்ளலாம்.
மேலும், இதில் மாணவர்களுக்கு இலவசமாக புத்தகங்கள் வழங்கப்பட்டு அவர்கள் வாசிக்கும் புத்தகங்களை அவர்களுக்கே கொடுக்கப்பட இருப்பதாகவும் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு வாசிப்பு பழக்கத்தில் ஈடுபட்டதற்கான சான்றிதழும் வழங்கப்படும்.
மாணவர்கள் மட்டும் இன்றி பொதுமக்கள் யார் வேண்டுமானாலும் ஆர்வம் இருப்பவர்கள் இந்த வாசிப்பு நிகழ்ச்சியில் பங்கெடுக்கலாம். இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக திரைப்பட நடிகை ரோகிணி உள்ளிட்ட பிரபலங்களும் ஐஏஎஸ் அதிகாரிகளும் கலந்து கொள்ள உள்ளனர்."
இவ்வாறு பபாசி நிர்வாகிகள் தெரிவித்தனர்.