மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 197 ரன்களை இலக்காக நிர்ணயித்தது RCB!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 8 விக்கெட்டுகளை இழந்து மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 197 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது.
17-வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா மார்ச் 22 ஆம் தேதி சென்னையில் தொடங்கி மே 26 ஆம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. சென்னை, பெங்களூரு, மும்பை, கொல்கத்தா, ஐதராபாத், டெல்லி, பஞ்சாப், குஜராத், லக்னோ, ராஜஸ்தான் ஆகிய 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. இந்நிலையில் இன்றைய போட்டி மகாராஷ்டிராவில் உள்ள வான்கடே மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கிடையே நடைபெற்று வருகிறது.
இதையும் படியுங்கள் : பையா ரீ-ரிலீஸ் – வாழ்த்துகளை பரிமாறிக்கொண்ட இயக்குநர் லிங்குசாமி மற்றும் நடிகை தமன்னா!
இந்நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியா பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதையடுத்து ,ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பேட்டிங் செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்ய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு தொடக்க ஆட்டக்காரராக விராட் கோலி களமிறங்கி 3 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்ததாக களமிரங்கிய அறிமுக வீரர் வில் ஜேக்ஸ் 8 ரன்களில் ஆட்டமிழந்தார்.
பின்னர், களமிறங்கிய பாப் டு பிளெசிஸ் 40 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து, அணியை முன்னெடுத்து சென்று ஆட்டமிழந்தார். அடுத்த களமிறங்கிய மேக்ஸ்வெல் 4 பந்துகளில் ரன் எதுவும் அடிக்காமல் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ராஜத் பட்டிதர் 26 பந்துகளில் 50 ரன்களை விளாசினார்.
இதன் மூலம் போட்டியின் முடிவில் பெங்களூரு அணி 8 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்களை குவித்தது. பெங்களூரு சார்பில் தினேஷ் கார்த்திக் 53 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் சிறப்பாக பந்துவீசிய பும்ரா ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றினார். கோட்சீ, ஆகாஷ், ஸ்ரேயஸ் கோபால் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 197 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.