#RCBvsSRH : கடைசி வரை போராடி தோற்ற பெங்களூரு அணி... ஹைதராபாத் அணிக்கு ஹாட்ரிக் வெற்றி!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றதுடன், 287 ரன்கள் விளாசி மீண்டும் புதிய சாதனையை படைத்துள்ளது.
17வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா மார்ச் 22-ம் தேதி சென்னையில் தொடங்கி மே 26-ம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. இதில், சென்னை, பெங்களூரு, மும்பை, கொல்கத்தா, ஐதராபாத், டெல்லி, பஞ்சாப், குஜராத், லக்னோ, ராஜஸ்தான் ஆகிய 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.
இதையும் படியுங்கள் : “வாக்குக்காக மலிவான அரசியல் செய்யும் மோடி போன்ற பிரதமரை இந்திய வரலாறு இதுவரை பார்க்கவில்லை!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்
அந்த வகையில் 30-வது லீக் ஆட்டம் நேற்று (ஏப். 15) பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட் களமிறங்கினர்.
அபிஷேக் சர்மா 34 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ஹெண்ட்ரிச் கிளாசனுடன் ஜோடி சேர்ந்த டிராவிஸ் ஹெட் பெங்களூரு சிறப்பாக ஆடினார். அவர் 39 பந்துகளில் சதம் அடித்தார். ஹெண்ட்ரிச் கிளாசன் 67 ரன்கள் குவித்த நிலையில் கேட்ச் மூலம் அவுட் ஆனார். இவர்களை அடுத்து மார்க்ரம், அப்துல் சமத் களமிறங்கினர். 20 ஓவர்கள் முடிவில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 287 ரன்கள் குவித்தது.
இதையடுத்து, 288 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி களமிறங்கியது. அதிரடியாக விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 262 ரன்கள் எடுத்தது. அனுஜ் ரவாத் 25 ரன்களுடனும், வைசாக் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். அதிகபட்சமாக தினேஷ் கார்த்திக் 35 பந்துகளுடன் 83 ரன்களை விளாசினார். ஃபாஃப் டு பிளெசிஸ் 28 பந்துகளில் 62 ரன்கள் எடுத்தார். மேலும், விராட் கோலி 20 பந்துகளில் 42 ரன்கள் எடுத்தார். இந்நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான லீக் போட்டியில் 25 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றது.
முன்னதாக நடப்பு மார்ச் 27-ம் தேதி நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் இழப்புக்கு 277 ரன்களை குவித்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அதிகபட்ச ஐபிஎல் ஸ்கோர் சாதனையை படைத்திருந்தது. தற்போது தனது ரெக்கார்டை தானே முறியடித்து நேற்றைய ஆட்டத்தில் 287 ரன்கள் எடுத்து ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோர் எடுத்த அணி என்ற சாதனையை படைத்துள்ளது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.