மும்பை இந்தியன்ஸை வீழ்த்தியது RCB – முதன்முறையாக ‘பிளே ஆஃப்’ சுற்றுக்கு தகுதி!
மகளிர் ப்ரீமியர் லீக் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்றது.
மகளிர் ப்ரீமியர் லீக்-ன் இரண்டாவது தொடர் பிப்ரவரி 23-ம் தேதி கோலாகலமாகத் தொடங்கியது. இந்த தொடரில் மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், டெல்லி கேப்பிட்டல்ஸ், யு.பி.வாரியர்ஸ் மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.
ஒவ்வொரு அணியும் லீக் சுற்றில் மற்ற அணிகளுடன் 2 முறை மோதும். இதில் முதலிடம் பிடிக்கும் அணி நேரடியாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறும். தொடர்ந்து 2, 3-வது இடங்களை பிடிக்கும் அணிகள், எலிமினேட்டர் சுற்றில் விளையாடும். எலிமினேட்டர் சுற்றில் வெற்றி பெறும் அணி இறுதிச் சுற்றில் களமிறங்கும்.
இதையும் படியுங்கள் : போர்களின் கோர முகத்தை எடுத்துரைத்த புகைப்படங்கள் வரிசையில் இஸ்ரேல் – ஹமாஸ் போர் குறித்த புகைப்படம்…!
இந்நிலையில், மகளிர் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதின. டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கி விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி, 19 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 113 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 114 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 15 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் மட்டுமே இழந்து 115 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் பெங்களூர் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம், நடப்பு தொடரில் 4வது வெற்றியை பதிவு செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதன்முறையாக ‘பிளே-ஆஃப்’ சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.