ரூ.50 கோடியை நெருங்கும் ராயன் | 2 நாளில் மொத்தம் எவ்வளவு வசூல் தெரியுமா?
முதல் வாரத்திற்குள்ளாக ராயன் படம் 50 கோடி வசூலை நெருங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தனுஷ் நடித்துள்ள ராயன் படம் கடந்த ஜூலை 26-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. சந்தீப் கிஷன் , காலிதாஸ் ஜெயராம் , செல்வராகவன் , எஸ்.ஜே சூர்யா , துஷாரா விஜயன் , அபர்ணா பாலமுரளி , பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். சன் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
தமிழ் , தெலுங்கு , இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியான ராயன் படம் ரசிகர்களிடம் பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இயக்குநராகவும் நடிகராகவும் தனுஷிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. குறிப்பாக தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களிடம் படத்தின் ரிலீஸுக்கு முன்பிருந்தே பெரியளவில் எதிர்பார்ப்பு இருந்தது. முன்பதிவுகளில் மட்டும் ராயன் படம் 6 கோடிக்கும் மேலாக வசூல் செய்திருந்தது குறிப்பிடத் தக்கது.
இன்று நடிகர் தனுஷின் தனது 42-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு தனுஷ் ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக திரையரங்கிற்கு படை எடுத்து வருகிறார்கள். ராயன் படம் முதல் நாளில் இந்தியளவில் ரூ 13.65 கோடி வசூலித்தது. தனுஷ் நடித்த படங்களில் முதல் நாளில் அதிக வசூல் ஈட்டிய படமாக கர்ணன் இருந்து வந்தது. கர்ணன் படம் முதல் நாளில் மொத்தம் 10.40 கோடி வசூல் செய்தது.
தற்போது தனுஷ் நடித்த படங்களில் அதிக வசூல் ஈட்டிய படங்களில் ராயன் படம் முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது நாளில் ராயன் படம் 13.75 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மொத்தமாக இரண்டு நாட்களில் 27.4 கோடி வசூலித்துள்ளது. படம் வெளியான முதல் வாரத்திற்குள்ளாக ராயன் படம் 50 கோடி வசூலை நெருங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.