Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

8 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ரேஷன் கடைகள் - #Puducherry முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு!

12:53 PM Oct 16, 2024 IST | Web Editor
Advertisement

புதுச்சேரியில் 8 ஆண்டுகளுக்கு பிறகு ரேஷன் கடைகள் திறக்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

Advertisement

‘சட்டப்பேரவையில் அறிவித்தப்படி, மீண்டும் ரேஷன் கடைகளை திறப்பது எப்போது?’ என்ற கேள்வி புதுச்சேரி மக்களிடம் எழுந்துள்ளது. புதுச்சேரியில் உள்ள ரேஷன் கடைகள் மூலம் சிவப்பு ரேஷன் கார்டுதாரர்களுக்கு 20 கிலோ, மஞ்சள் கார்டுதாரர்களுக்கு 10 கிலோ இலவச அரிசி (தரமான, வர்த்தகப் பயன்பாட்டில் உள்ள வெள்ளை நிற அரிசி) வழங்கப்பட்டு வந்தது.

மேலும் ரேஷன் கடைகள் மூலம் தீபாவளிக்கு இலவச சர்க்கரை, பொங்கல் பண்டிகைக்கு தேவையான அரிசி, வெல்லம் உள்ளிட்ட 14 வகையான பொருட்கள் வழங்கப்பட்டன. இத்துடன், ரேஷன் கடைகளில் கோதுமை, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை மானிய விலையில் வழங்க வேண்டும் என்றும் பல்வேறு அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்து வந்தன. இந்த நிலையில் கடந்த காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் முதலமைச்சராக இருந்த நாராயணசாமி - அப்போதைய துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஆகியோருக்கு இடையே மோதல் ஏற்பட்டது.

அப்போது, இலவச அரிசி வழங்குவதற்கு பதிலாக நேரடி பண பரிமாற்ற திட்டத்தை கிரண்பேடி கொண்டு வந்தார். அதன்படி, ரேஷன் கார்டு தாரர்ளுக்கு அவர்களது வங்கிக் கணக்கில், அரிசிக்கான பணத்தை வழங்க உத்தரவிட்டார். இதன்படி சிவப்பு ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.1,200, மஞ்சள் ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.600 நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது. இதிலும், சில மாதங்கள் தொய்வு ஏற்பட்டு, அது தொடர்பாகவும் சர்ச்சை எழுந்தது.

இந்த நேரடி பணம் வழங்கும் முறையை எதிர்த்து நாராயணசாமி, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மாநில அரசு நிதியில் வழங்கப்படும் இலவச அரிசியை தடுக்கக்கூடாது என வழக்கில் குறிப்பிட்டிருந்தார். புதுவை யூனியன் பிரதேசம் என்பதால், மத்திய உள்துறைக்குத்தான் இதில் முடிவெடுக்கும் அதிகாரம் உள்ளது என்று கூறி இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதன் மேல்முறையீடு வழக்கிலும் இந்த தீர்ப்பு உறுதி செய்யப்பட்டது.

இதனால், புதுவையில் இலவச அரிசிக்கு பதிலாக கடந்த 7 ஆண்டுகளாக பயனாளிகளின் வங்கிக் கணக்கில் பணம் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் ரேஷன் கடைகள் மூடப்பட்டு கிடக்கின்றன. இடையில் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தோற்று, என்,ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஆட்சியமைத்தது. ஆனாலும், ரேஷன் கடைகள் திறக்கப்படவில்லை.

மீண்டும் ரேஷன் கடைகளை திறந்து இலவச அரிசியோடு, அத்தியாவசிய பொருட்களை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை அரசியல் கட்சிகளால் தொடர்ந்து வைக்கப்பட்டு வருகிறது. ரேஷன் கடைகளை மூடப்பட்டதன் தாக்கம், நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் எதிரொலித்தது. பிரச்சாரத்துக்கு சென்ற முதலமைச்சர் ரங்கசாமியிடம், பணத்துக்கு பதிலாக அரிசியை வழங்கும்படி பெண்கள் வலியுறுத்தினர்.

அப்போது அவர், “மீண்டும் ரேஷன் கடைகளை திறந்து இலவச அரிசி வழங்கப்படும்” என உறுதியளித்தார். இருப்பினும், ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி தேர்தலில் தோல்வியடைந்தது. இதையடுத்து நடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில், “ரேஷன் கடைகள் திறக்கப்பட்டு, இலவச அரிசி வழங்கப்படும்” என்று முதலமைச்சரால் அறிவிக்கப்பட்டது. செப்டம்பர் மாதமே ரேஷன் கடைகள் திறக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது. ஆனால் இதுவரை ரேஷன் கடைகள் திறக்கப்படவில்லை.

இந்நிலையில், பொதுமக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள் ரேஷன் கடைகளை மீண்டும் திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்த நிலையில் 8 ஆண்டுகளுக்குப் பிறகு ரேஷன் கடைகள் திறப்பதை முதலமைச்சர் ரங்கசாமி உறுதி செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

“வருகின்ற 21 தேதி புதுச்சேரியில் உள்ள ரேஷன் கடைகள் திறக்கப்பட்டு தீபாவளி பரிசாக 10 கிலோ இலவச அரிசி மற்றும் 2 கிலோ சர்க்கரை வழங்கப்படும்.

தீபாவளி அரிசி சர்க்கரை வழங்கிய பிறகு வழக்கம் போல மஞ்சள் அட்டை தாரர்களுக்கு 10 கிலோ இலவச அரிசியும், சிகப்பு அட்டை தாரர்களுக்கு 20 கிலோ அரிசியும் மாதம்தோறும் வழங்கப்படும். மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை ரூபாய் 1000 உயர்த்தி வழங்கப்படும். இந்த தொகை நவம்பர் மாதம் முதல் வழங்கப்படும்.

இவ்வாறு புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்தார்.

Tags :
PuducherryrangasamyRation Shop
Advertisement
Next Article