“வீடு வீடாக சென்று சென்று ரேஷன் அரிசி வழங்கப்படும்” - முதலமைச்சர் ரங்கசாமி!
புதுச்சேரியில் கடந்த மார்ச் 10-ம் தேதி ஆளுநர் உரையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. தொடர்ந்து மார்ச் 12ஆம் தேதி 2025-26ஆம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தொடர்ந்து அதுகுறித்த விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் கூட்டத்தொடரின் 7வது நாளான இன்று உறுப்பினர்களின் கேள்வி, பதில் நேரத்தில் நெல்லித்தோப்பு சட்டமன்ற உறுப்பினர் ரிச்சர்ட், புதுச்சேரியில் அனைத்து தொகுதிகளிலும் இலவச அரிசி வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் பல்வேறு பகுதிகளில் இலவச அரிசியை பொதுமக்கள் வாங்குவதில்லை என குற்றம் சாட்டினார்.
இதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, “புதுச்சேரியில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதந்தோறும் நியாயவிலைக் கடைகள் மூலம் இலவச அரிசி வழங்கப்பட்டு வரும் நிலையில், நியாயவிலைக் கடைகள் இல்லாத பகுதிகளில் வாகனங்கள் மூலம் வீடு, வீடாக சென்று இலவச அரிசி வழங்கப்படும்” என உறுதியளித்தார்.