சினிமா துறையிலும் கால்பதித்த #RatanTata… எத்தனை படங்கள் தயாரித்தார் தெரியுமா?
பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான ஆட்பார் என்ற ஒரே ஒரு திரைப்படத்தை மற்றும் தயாரித்துள்ளார்.
பிரபல தொழிலதிபர்களில் ஒருவரும், டாடா குழுமத்தின் தலைவருமான ரத்தன் டாடா நேற்றிரவு காலமானார். இவரின் மறைவு அவரது குழுமத்தை மட்டுமின்றி உலக மக்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. காரணம் ஒரு தொழில் தலைவராக மட்டுமின்றி, மனிதநேயமிக்க மனிதராகவும் செயல்பட்டவர் ரத்தன் டாடா. தனது வருமானத்தில் பாதியை அறக்கட்டளைகளுக்கு வழங்கியவர். தற்போது இந்த மனிதநேய பண்பாளரின் மறைவுக்கு அவரது உறவினர்கள், குடும்பத்தினர், அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என அனைவரும் கண்ணீர் செலுத்துகின்றனர்.
அவருடைய உடல் மும்பை நரிமன் பாயிண்ட் பகுதியில் உள்ள கலை நிகழ்ச்சிகளுக்கான தேசிய மையத்திற்கு இன்று காலை கொண்டு வரப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இறுதி நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆகியோர் நேரில் சென்று ரத்தன் டாடாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
உப்பு முதல் தங்கம் வரை, கிட்டத்தட்ட அனைத்து துறை தயாரிப்புகளிலும் ஈடுபட்டிருந்த ரத்தன் டாடா, திரைத்துறையில் மட்டும் பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை. ஏனென்றால் அவருக்கு சினிமாவைப் பார்ப்பதற்கான நேரமும் ஆவலும் இல்லையென்றே அவர் தெரிவித்திருக்கிறார். இருப்பினும் அவர் ஒரேயொரு திரைப்படத்தை தயாரித்துள்ளார்.
கடந்த 2004 ஆம் ஆண்டு அமிதாப் பச்சன், ஜான் ஆபிரஹாம், பிபாசா பாசு நடிப்பில் வெளியான ஆட்பார் (Aetbaar) திரைப்படத்தை ரத்தன் டாடா தயாரித்திருந்தார். இத்திரைப்படத்தை விஜய் பட் இயக்கியிருந்தார். ரூ.8 கோடி மதிப்பில் உருவான இந்த திரைப்படம், வணிக ரீதியான தோல்வியைச் சந்தித்தது. இப்படத்தின், இணை தயாரிப்பாளராகவே ரத்தன் டாடா இருந்திருக்கிறார். இப்படத்திற்குப் பிறகு ரத்தன் டாடா எந்த படத்தையும் தயாரிக்கவில்லை.