#RatanTata உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு!
தொழிலதிபர் ரத்தன் டாடாவின் உடலுக்கு குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டன.
பிரபல தொழிலதிபர்களில் ஒருவரும், டாடா குழுமத்தின் தலைவருமான ரத்தன் டாடா நேற்றிரவு காலமானார். இவரின் மறைவு அவரது குடும்பத்தை மட்டுமின்றி உலக மக்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. காரணம் ஒரு தொழில் தலைவராக மட்டுமின்றி, மனிதநேயமிக்க மனிதராகவும் செயல்பட்டவர் ரத்தன் டாடா. தனது வருமானத்தில் பாதியை அறக்கட்டளைகளுக்கு வழங்கியவர். தற்போது இந்த மனிதநேய பண்பாளரின் மறைவுக்கு அவரது உறவினர்கள், குடும்பத்தினர், அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என அனைவரும் கண்ணீர் அஞ்சலி செலுத்துகின்றனர்.
இயல்பான சுபாவம் , மனித நேய செயற்பாடுகள் , விலங்குகளின் மீதான பிரியம் என அவரது பல்வேறு குணங்கள் மக்கள் வியந்து பார்க்கப்படுபவை. சொந்தமாக தொழில் தொடங்கி முன்னேற நினைக்கும் ஒவ்வொரு இளைஞருக்கு ரத்தன் டாடா முன்னுதாரணமாக இருந்து வருகிறார். இனிமேலும் இருப்பார். ரத்தன் டாடாவின் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர்.
அவருடைய உடல் மும்பை நரிமன் பாயிண்ட் பகுதியில் உள்ள கலை நிகழ்ச்சிகளுக்கான தேசிய மையத்திற்கு இன்று காலை கொண்டு வரப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டது. அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் நேரில் சென்று ரத்தன் டாடாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
பொதுமக்களின் அஞ்சலிக்குப் பிறகு ரத்தன் டாடாவின் இறுதி ஊர்வலம் நடைபெற்றது. ரத்தன் டாடாவின் உடல் மும்பை ஒர்லியில் உள்ள பார்சி சுடுகாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்குள்ள பிரார்த்தனை மையத்தில் உடல் வைக்கப்பட்டு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. மத்திய அரசு சார்பில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்று இறுதி அஞ்சலி செலுத்தினார்.
மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதலமைச்சர் தேவேந்திர பட்நாவிஸ், குஜராத் முதலமைச்சர் பூபேந்திர பட்டேல் உள்ளிட்ட தலைவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர். ரத்தன் டாடாவின் உடலுக்கு மகாராஷ்டிர அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. மேலும், காவல்துறை சார்பில் துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டன. அதன்பின்னர், ரத்தன் டாடாவின் உடலுக்கு பார்சி சமூக முறைப்படி இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டன.