"ரூ.500-க்கு சிலிண்டர் வழங்கப்படும்" - RJDயின் தேர்தல் அறிக்கை வெளியீடு!
500 ரூபாய்க்கு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும் என்று ராஷ்டிரிய ஜனதாதளத்தின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ம் தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. ஜூன் 4ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதனால் நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்து, வேட்பாளர்களை அறிவித்து, தேர்தலுக்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
இதையும் படியுங்கள் : மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை: குற்றால அருவிகளில் நீர்வரத்து – சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!
பீகாரில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 26 இடங்களில் ராஷ்டிரிய ஜனதாதளம் போட்டியிடுகிறது. இந்நிலையில், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் (ஆர்ஜேடி) மூத்த தலைவரும், பீகார் முன்னாள் துணை முதலமைச்சருமான தேஜஸ்வி யாதவ் இன்று காலை மக்களவை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையே வெளியிட்டுள்ளார். ராஷ்டிரிய ஜனதாதளத்தின் மூத்த தலைவர்கள் முன்னிலையில் தேர்தல் அறிக்கையை தேஜஸ்வி யாதவ் வெளியிட்டார். மொத்தமாக 24 வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளார்.
இவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது :
- பூர்னியா, பாகல்பூர், முசாபர்பூர், கோபால்கஞ்ச் மற்றும் ரக்சால் ஆகிய 5 பகுதிகளில் புதிய ஐந்து விமான நிலையங்கள் அமைக்கப்படும்.
- ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ. 1 லட்சம் வழங்கப்படும்.
- அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும்.
- பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும்.
- ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் வேலையில்லா திண்டாட்டத்திலிருந்து மக்கள் விடுதலை பெறுவர். ராஷ்டிரிய ஜனதாதளம் ஆட்சிக்கு வந்தால் ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் வேலையில்லாதவர்களுக்கு வேலை வழங்கும் பணி தொடங்கும்.
- 500 ரூபாய்க்கு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும். உள்ளிட்ட 24 தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டும்"
இவ்வாறு ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவரும், பீகார் முன்னாள் துணை முதலமைச்சருமான தேஜஸ்வி யாதவ் தெரிவித்தார்.