ராஷ்மிகாவின் Deep Fake வீடியோ விவகாரம்: வீடியோவை உருவாக்கியவர் கைது!
நடிகை ராஷ்மிகா மந்தனாவின் Deep Fake வீடியோவை உருவாக்கியவர் கைது செய்யப்பட்டதாக டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.
தற்போது மிகவும் டிரெண்டிங்கில் உள்ளது AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் Deep Fake என்ற செயலி. இதைப்பயன்படுத்தி எந்த ஒரு புகைப்படத்தையோ, அல்லது வீடியோவையோ மார்பிங் செய்து ரியலானது போல் உருவாக்க முடியும். இதை பயன்படுத்தி ஒருவரின் குரலை தங்களின் தேவைக்கேற்ப பயன்படுத்திக் கொள்ள முடியும். சமீபத்தில் கூட தமிழ் பாடல்களை பிரதமர் மோடியின் குரலில் மாற்றி அதனை இன்ஸ்டாகிராமில் வைரலாக்கி வந்தன.
அண்மையில், சினிமா நடிகை ராஷ்மிகா மந்தானாவின் போலி வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. Deep Fake தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சினிமா நடிகை ராஷ்மிகா மந்தானாவின் முகத்தை வைத்து போலியாக உருவாக்கப்பட்ட வீடியோ நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியது.
இதையடுத்து, செயற்கை நுண்ணறிவு, டீப் ஃபேக் தொழில்நுட்பம், போலி வீடியோக்கள் தொடர்பான கவலைகள் எழுப்பப்பட்டன. அதன் தொடர்ச்சியாக, போலி வீடியோ தயாரித்து வெளியிட்டால் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்த மத்திய அரசு, அது தொடர்பான அறிவுறுத்தல்களையும் வெளியிட்டது.
இதையும் படியுங்கள்: மெளத் ஆர்கன் வாசித்து பிரதமர் மோடியை வியக்க வைத்த யானை!
அதனைத் தொடர்ந்து நடிகை கத்ரீனா கைஃப் இதேபோல ஒரு போலி வீடியோ சர்ச்சையில் சிக்கினார். அவர் நடித்த டைகர் 3 திரைப்படத்தின் ஒரு காட்சியை Deep Fake செயலியை உபயோகப்படுத்தி ஆபாசமாக சித்தரித்து இணையத்தில் சிலர் பரப்பினர். சில மணி நேரங்களுக்குப் பிறகு மாற்றியமைக்கப்பட்ட மற்றும் போலியான படம் சமூக ஊடகங்களில் இருந்து நீக்கப்பட்டது. இதற்கு பலரும் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகிறார்கள்.
தொடர்ந்து பாலிவுட் நடிகை கஜோல் உடை மாற்றுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியது. அந்த வீடியோவும் Deep Fake தொழில்நுட்பத்தை பயன்படுத்தி போலியாக உருவாக்கப்பட்டது என தெரியவந்தது. சமூக வலைதளங்களில் பெரும் ஃபாலோவர்களை கொண்ட ரோஸி பிரீனின் வீடியோவில் அவரது முகத்திற்கு பதிலாக கஜோலின் முகத்தை வைத்து டீப் ஃபேக் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி போலியாக தயாரிக்கப்பட்டுள்ளதாக உண்மை கண்டறியும் இணையதளங்கள் கண்டறிந்து செய்தி வெளியிடப்பட்டன.
இந்த நிலையில் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் Deep Fake வீடியோவை உருவாக்கியவர் கைது செய்யப்பட்டதாக டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.