இணையத்தில் வைரலான Deep Fake வீடியோ.. தைரியமாக எதிர்கொண்ட ராஷ்மிகா மந்தனா.. நடந்தது என்ன?
துரு துரு கண்கள், நவ ரசங்களும் காட்டும் முகம் என முன்னணி நடிகையாக ரசிகர்களால் கொண்டாடப்படும் ராஷ்மிகா மந்தனாவை கிட்டத்தட்ட 40 மில்லியன் பேர் இன்ஸ்டாகிராமிலும், 4.7 மில்லியன் பேர் எக்ஸ் வலைதள பக்கத்திலும் பின் தொடர்கின்றனர். இவ்வளவு ரசிகர்களை சமூக வலைதளங்களில் வைத்திருக்கும் ராஷ்மிகாவிற்கு அதுவே தலைவலியாக மாறிப்போனது.
2016-ம் ஆண்டு கிரிக் பார்ட்டி என்கிற கன்னடப் படம் மூலமாக திரையுலகில் அறிமுகமானவர் ராஷ்மிகா. முதல் படத்திலேயே.. அட.. யாருப்பா இந்த பொண்ணு... என கன்னட ரசிகர்களை தன்பக்கம் ஈர்த்தது அவரது ’கியூட்’ ஆன நடிப்பு, அடுத்தடுத்து கன்னடப்படங்களில் நடித்துக்கொண்டு இருந்த அவரை, 2018-ம் ஆண்டு ச்சலோ திரைப்படம் மூலமாக டோலிவுட்டிற்கு அழைத்து வந்தார் இயக்குநர் வெங்கி குடுமுலா.. அந்த படம் வசூலில் சாதனை படைத்தாலும், 2018-ம் ஆண்டு அவரை பல்வேறு மொழி ரசிகர்களுக்கும் அறிமுகப்படுத்தியது கீதா கோவிந்தம் திரைப்படத்தில் இடம்பெற்ற இன்கிம், இன்கிம் பாடல்... ஒரே நேரத்தில் கன்னடம், தெலுங்கு, தமிழ் என அனைத்து தரப்பு ரசிகர்களாலும் ராஷ்மிகா கொண்டாடப்ப்ட்டார்... இப்படி தன்னுடைய கிராஃபில் பெரும் பாய்ச்சலாக பாலிவுட் வரை அவரது பயணம் வேகமெடுத்தது.
இந்த சூழலில் தான் ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவு மூலம் மார்ஃபிங் செய்யப்பட்ட ராஷ்மிகா மந்தனாவின் கவர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இது குறித்து பதிவிட்டுள்ள ராஷ்மிகா, இந்த ஃபேக் வீடியோ தன்னை அதிகமாக காயப்படுத்தி விட்டது என்றும் டீப் ஃபேக்- கின் ஆபத்து குறித்து பேச வேண்டிய தருணமிது என்றும் தெரிவித்தார். ஏற்கனவே பல நடிகைகள் இது போன்ற சூழல்களை பல்வேறு தருணங்களில் எதிர்கொண்டுள்ளனர். ஆனால் தற்போதைய ஏ.ஐ. தொழில்நுட்பம் இதன் விளைவுகளை தீவிரப்படுத்தி உள்ளது.
தைரியமாக இந்த தருணத்தை எதிர்கொண்டுள்ள ராஷ்மிகாவிற்கு நடிகர்கள் அமிதாப் பச்சன், நாக சைதன்யா, மிருனாள் தாக்கூர், பாடகி சின்மயி உள்ளிட்ட பிரபலங்கள், மற்றும் ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அதே போல சமூக வலைதளங்களில் தனக்கு உறுதுணையாக நிற்கும் அனைவருக்கும் தனித்தனியே ராஷ்மிகா நன்றியும் தெரிவித்து வருகிறார்.
ஜெயிலர் படத்தில் இடம்பெற்ற காவாலா பாடலுக்கு தமன்னா ஆடிய நடனத்தை இதேபோல மார்ஃபிங் செய்து அதில் சிம்ரன் ஆடுவது போல் வெளியான போது அது வரவேற்பைக் பெற்றது. ஆனாலும் அதன் பின்னால் இருந்த ஆபத்து குறித்தும் பலராலும் எச்சரிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது ராஷ்மிகா, காத்ரினா கைஃப் உள்ளிட்டோரின் முகங்களை வைத்து வெளியாகியுள்ள வீடியோக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளன. வலைதளம் என்பது ஒரு கடல்.. இதில் நல்லது இருக்கும் தீயதும் இருக்கும். ஆனால் தீயது சற்று அதிகமாக உள்ளது போன்ற தோற்றத்தை இதுபோன்ற செயல்கள் ஏற்படுத்துவதால் சமானியர்களுக்கு இயல்பாகவே ஏற்படும் அச்சம் தவிர்க்கமுடியாதது.
இந்நிலையில் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் தனது எக்ஸ் பதிவில் குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் உறுதியாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார். தகவல் தொழில் நுட்பவிதிகளை சமூக வலைதளங்கள் பின்பற்ற வேண்டும் என்றும், COMMUNITY STANDARDS எனப்படும் சமூக விதிகளை பின்பற்ற தவறினால் பாதிக்கபட்ட நபர், குறிப்பிட்ட சமூக வலைதளங்கள் மீது வழக்கு தொடரலாம் என்றும் தெரிவித்துள்ளார். போலி வீடியோகளை வெளியிட்டால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை எனவும் எச்சரித்து உள்ளார். ஆனாலும் சாமானியர்கள் அனைவருக்கும் இது சாத்தியமா என்பதும் கேள்விக்குறியே!..
- அன்சர் அலி