ராப் பாடகர் வேடன் மீது குவியும் பாலியல் குற்றச்சாட்டு புகார்கள்!
கேரளாவின் பிரபல ராப் பாடகர் வேடன் (எ) ஹிரந்தாஸ் முரளி மீது பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. ஏற்கெனவே ஒரு பெண் மருத்துவர் புகார் அளித்த நிலையில், தற்போது மேலும் இரு பெண்கள் நேரடியாக முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் டிஜிபியிடம் புகார் அளித்துள்ளனர்.
புகார் அளித்த இரண்டு பெண்களில் ஒருவர் 2020-ஆம் ஆண்டிலும், மற்றொருவர் 2021-ஆம் ஆண்டிலும் வேடனால் ஏமாற்றப்பட்டதாகக் கூறியுள்ளனர். இருவரும் தங்கள் தனிப்பட்ட விவரங்களைக் குறிப்பிட்டு, சமூக வலைதளங்களில் ஹிரந்தாஸ் முரளியுடன் ஏற்பட்ட பழக்கத்தை விவரித்துள்ளனர்.
இந்தப் பழக்கம் பின்னர் பாலியல் துன்புறுத்தலுக்கு வழிவகுத்ததாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். பெயர் வெளியிட விரும்பாத ஒரு இளம்பெண், 2020-ஆம் ஆண்டு முதல் வேடனுடன் தொடர்பில் இருந்ததாகவும், திருமண வாக்குறுதி அளித்து தன்னை ஏமாற்றியதாகவும் கூறியுள்ளார்.மற்றொரு பெண், 2021-ஆம் ஆண்டில் இதேபோல ஏமாற்றப்பட்டு, துன்புறுத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
இந்தப் பெண்கள் நேரடியாக முதலமைச்சர் மற்றும் டிஜிபியிடம் புகார் அளிக்கக் காரணம், ஏற்கெனவே புகார் அளித்த பெண் மருத்துவருக்கு நீதி கிடைக்கவில்லை என்பதுதான். கேரளாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய அந்தப் பாலியல் புகாரில், காவல்துறை முறையாக நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது.
இதனால், தங்களுக்குப் பாதுகாப்பு கிடைக்குமா என்ற அச்சத்தில், இந்த இரண்டு பெண்களும் கேரள அரசின் உயர்மட்ட அதிகாரிகளிடம் நேரடியாக முறையிட்டுள்ளனர்.
இந்தத் தொடர் குற்றச்சாட்டுகளால், ராப் பாடகர் வேடனின் இசைப் பயணத்திற்குப் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் அவருக்கு எதிராகப் போராட்டங்களும், கருத்துகளும் தீவிரமடைந்துள்ளன.