தொடர் கனமழை எதிரொலி: காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் நாளை விடுமுறை அறிவிப்பு!
தொடர்ந்து கனமழை பெய்துவருவதால் காஞ்சிபுரம், சென்னை, ராணிப்பேட்டை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. சென்னையில், இன்று காலை முதலே, விட்டுவிட்டு கனமழை பெய்து வந்தது.
இதனடையே தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் இன்று மாலை முதல் கனமழை கொட்டித்தீர்த்தது. கடந்த ஒரு மணி நேரத்தில் 8 செ.மீ வரை மழை பெய்துள்ளது. இதனால் சாலையெங்கும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. பல்வேறு இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை காலை 8.30 மணி வரை மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில் தொடர்மழை காரணமாகவும், நாளை கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாலும் காஞ்சிபுரம், சென்னை, ராணிப்பேட்டை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.