இட ஒதுக்கீடு போராட்ட தியாகிகள் மற்றும் பெரியார் சிலைக்கு ராமதாஸ் மரியாதை!
பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், தைலாபுரம் பயிலரங்கத்தில் இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்த 21 தியாகிகளின் உருவ படத்திற்கு மலர்தூவி மெழுகு வர்த்தி ஏந்தி ராமதாஸ் அஞ்சலி செலுத்தினார். இந்நிகழ்வில் அவரது மூத்தமகள் காந்திமதி, கெளரவ தலைவர் ஜி கே மணி உள்ளிட்டோர் உடனிருந்தனர். தொடர்ந்து உயிரிழந்த தியாகிகளின் குடும்பத்தினருக்கு நலத்திட்ட உதவிகளை ராமதாஸ் வழங்கினார்.
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 17 ஆம் தேதி மருத்துவர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் தைலாபுரத்தில் ஒன்றாக இணைந்து இடஒதுக்கீடு போராளிகள் படத்திற்கு அஞ்சலி செலுத்துவது வழக்கம். ஆனால் இந்தாண்டு இருவருக்குமான மோதல் காரணமாக மருத்துவர் ராமதாஸ் மட்டும் தைலாபுரம் இல்லத்தில் கட்சி நிர்வாகிகளுடன் அஞ்சலி செலுத்தினார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், ”வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு கேட்டு உயிர்நீத்த தியாகிகளின் 38 ஆம் ஆண்டு
இன்று கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தியாகிகளின் உயிர் தியாகம் வீண் போகவில்லை, தியாகிகளின் தியாகத்தால் பலர் பயன் பெற்று வருவதாகவும், 10.5 சதவிகித இடஒதுகீட்டினை பெறுவோம்”}{ என தெரிவித்தார்.
மேலும், இந்திய பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை கூறுவதாக ராமதாஸ் தெரிவித்தார். அதன் பின்னர் தைலாபுரத்தில் அஞ்சலி செலுத்திய பின்பு சித்தணியில் உள்ள இடஒதுக்கீடு போராளிகள் நினைவு தூணில் ராமதாஸ் அஞ்சலி செலுத்தினார்.
முன்னதாக ராமதாஸ், பெரியாரின் 147 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தைலபுரத்தில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.