“ராமதாஸ் சற்று இறங்கி வந்துள்ளார்” - பாமக கெளரவ தலைவர் ஜி.கே.மணி பேட்டி!
பாமகவில் அதன் நிறுவனர் ராமதாஸூக்கும், தலைவர் அன்புமணி ராமதாஸூக்கும் இடையேயான மோதல் அதிகரித்து வருகிறது. இதன் வெளிப்பாடாக அண்மையில் ராமதாஸ் அளித்த பேட்டியில், அன்புமணி ராமதாஸூக்கு தலைமை பண்பு இல்லை, தாய் மீது பாட்டில் வீசினார், வளர்த்த கடா மார்பில் பாய்ந்தது என அடுக்கடுக்கான குற்றச்சாட்டை வைத்தார்.
இதனிடையே பாமகவின் சித்திரை முழுநிலவு இளைஞர் மாநாட்டிற்கு பிறகு ராமதாஸ் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை நடத்தினார். இதில் குறைந்த அளவிலான மாவட்ட செயலாளர்களே பங்கேற்றனர். இது பாமகவில் ராமதாஸுன் அதிகாரத்தை கேள்விக்குள்ளாக்கியதாக பேசப்பட்டது. இதையடுத்து அன்புமணி ராமதாஸ் நேற்றும் இன்றும்(மே.31) பாமக ஆலோசனை கூட்டத்தை நடத்தி வருகிறார். இதில் அவருக்கு ஆதரவாக பாமக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
நேற்றைய கூட்டத்தின்போது அக்கட்சியின் பொருளாளர் திலகபாமா, அன்புமணி ராமதாஸ் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றதற்காக, அவர் வகித்து வந்த கட்சி பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து அன்புமணி ராமதாஸ் திலகபாமா அந்த பதவியில் தொடருவார் என அறிவித்தார். அத்துடன் கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்க பாமகவின் பொதுக்குழுவுக்கு தான் அதிகாரம் உள்ளது என்று அறிவித்தார். இதையடுத்து பாமக நிறுவனர் ராமதாஸ் தொடர்ந்து 16 மாவட்ட செயலாளர்கள் உட்பட 4 மாவட்ட தலைவர்களை கட்சிப் பதவியில் இருந்து நீக்கி அவர்களுக்கு பதிலாக புதிய நிர்வாகிகளை அறிவித்து வந்தார்.
இந்த நிலையில் ராமதாஸ் தனது நிலைபாட்டில் இருந்து சற்று இறங்கி வருவதாக பாமக கெளரவ தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், “என்னுடைய வேதனையை அவரிடம் சொல்லி இருக்கிறேன். அவர் சற்று தனது நிலைபாட்டில் இருந்து இறங்கி வந்துள்ளார். அதே போல் அன்புமணியும் இறங்கி வர வேண்டும். தற்போதுள்ள சூழல் நீடிக்க கூடாது என்பது தான் எங்களின் கருத்து. இரண்டு பேர் நேரில் சந்தித்து உட்கார்ந்து பேசினால் பிரச்சனைகள் எல்லாம் முடிவுக்கு வந்துவிடும். அதற்கான முயற்சிகளில் தான் நான் தீவிரமாக ஈடுபட்டு வருகிறேன்” என்று கூறியுள்ளார்.