ராமர் சிலை பிரதிஷ்டை விழா: நடிகை பார்வதியின் பதிவு - குவியும் பாராட்டுகள்!
இன்று அயோத்தியில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட நிலையில், நடிகை பார்வதி அரசியல் அமைப்புச் சட்டத்தின் முகவுரையை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். இதனை நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பகிர்ந்துள்ளார்.
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த 2019-ம் ஆண்டு அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து கடந்த 2020 ஆகஸ்ட் முதல் பூமி பூஜை செய்யப்பட்டு அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 2.27 ஏக்கர் பரப்பளவில் 3 அடுக்கில் உருவாகி வரும் ராமர் கோயிலின் கட்டுமானப் பணிகள் முடிவடையவுள்ள நிலையில், கோயில் கருவறையில் மூலவர் குழந்தை ராமர் சிலை இன்று பிரதிஷ்டை செய்யப்பட்டது.
உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு அந்த நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். பகல் 12.30 மணியளவில் ராமர் கோயில் பிரதிஷ்டை நிகழ்வு நடைபெற்றது. பிரதமர் மோடி குழந்தை ராமர் சிலையை பிரதிஷ்டை செய்தார்.
இந்த நிலையில் நடிகை பார்வதி ’நமது நாடு மதச்சார்பற்ற, சோசலிச, ஜனநாயகம் உள்ள நாடு என்பதை குறிக்கும் அரசியல் அமைப்பு சட்டத்தின் முகவுரையை தனது சமூக வலை தளத்தில் பதிவு செய்துள்ளார். அதில் இந்திய அரசின் ஜனநாயக தன்மையை வலியுறுத்தி, இந்திய மக்களுக்காக அரசியலமைப்பு உருவாக்கப்பட்டது என்று தெளிவான முன்னுரை அமைந்துள்ளது. மேலும் இறையாண்மை, சோசியலிஸ்ட், மதச்சார்பற்ற, ஜனநாயக, குடியரசு, நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், தேச ஒருமைப்பாடு மற்றும் ஒற்றுமை ஆகியவற்றின் தலைப்பில் சில வரிகள் உள்ளன.
ஒரு நாட்டின் பிரதமரே ஒரு குறிப்பிட்ட மதத்தின் கோயில் விழாவில் பங்கேற்பது குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வரும் நிலையில் நடிகை பார்வதி அரசியல் அமைப்பு சட்டத்தில் உள்ள சில வரிகளை தனது சமூக வலைத்தளத்தில் எடுத்துக் காட்டிய நிலையில் அவரை ரியல் சூப்பர் ஸ்டார் என்று கமெண்ட்கள் மூலம் சிலர் பாராட்டி வருகின்றனர்.
இந்த பதிவினை தூத்துக்குடி எம்.பி.யும், திமுக துணைப் பொதுச்செயலாளருமான கனிமொழி தனது பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.