அமெரிக்காவின் டைம்ஸ் சதுக்கத்தில் ராமர் படங்கள் ஒளிபரப்பு - அயோத்தி நிகழ்வை கொண்டாடும் விதமாக ஏற்பாடு.!
அமெரிக்காவின் டைம்ஸ் சதுக்கத்தில் அயோத்தி நிகழ்வை கொண்டாடும் விதமாக ராமர் படங்கள் ஒளிபரப்பப்பட்டன.
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த 2019-ம் ஆண்டு அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து கடந்த 2020 ஆகஸ்ட் முதல் பூமி பூஜை செய்யப்பட்டு அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 2.27 ஏக்கர் பரப்பளவில் 3 அடுக்கில் உருவாகி வரும் ராமர் கோயிலின் கட்டுமானப் பணிகள் முடிவடையவுள்ள நிலையில், கோயில் கருவறையில் மூலவர் குழந்தை ராமர் சிலை இன்று பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.
இந்த விழாவில் கலந்து கொள்ள நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பிரமுகர்கள், நடிகர்கள் என பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்காக உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு அந்த நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. இந்த நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் பங்கேற்கவுள்ளனர். பிரதமர் மோடி குழந்தை ராமர் சிலையை திறந்து வைக்க உள்ளார்.
ராமர் கோயில் பிரதிஷ்டை விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பதற்காக கடந்த 11 நாட்கள் தீவிரமாக விரதம் கடைப்பிடித்து வருந்தார். பிரம்ம முகூர்த்தத்தில் கண்விழிக்கும் பிரதமர் மோடி ராம மந்திரங்களை உச்சரிப்பதோடு, உணவாக பழங்களை மட்டும் இளநீர் பருகினார். மேலும் மரக்கட்டிலில் போர்வை விரித்து தூங்கினார். இந்த விரதத்தை தொடர்ந்து தான் பிரதமர் மோடி இன்று ராமர் கோவில் பிரதிஷ்டை பங்கேற்க உள்ளார்.
இன்று காலை பகல் 12.05 - 12.55 வரை ராமர் சிலை பிரதிஷ்டை நிகழ்வு நடைபெற உள்ளது. இந்த நிலையில் அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில் ராமர் சிலை பிரதிஷ்டை குறித்து ஒளிபரப்பானது. அங்குள்ள இந்தியர்கள் இந்த ஏற்பாட்டைச் செய்தனர். இந்த நிகழ்வின்போது டைம்ஸ் சதுக்கத்தினை சுற்றி பாடல் பாடி உற்சாக முழக்கம் எழுப்பினர்.