ராமர் கோயில் பிரதிஷ்டை - கட்டுமானம் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்!
ராமர் கோயில் பிரதிஷ்டை நடைபெற உள்ள நிலையில் கட்டுமானம் பற்றிய சுவாரஸ்ய தகவல்களை விரிவாக காணலாம்.
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த 2019-ம் ஆண்டு அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து கடந்த 2020 ஆகஸ்ட் முதல் பூமி பூஜை செய்யப்பட்டு அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 2.27 ஏக்கர் பரப்பளவில் 3 அடுக்கில் உருவாகி வரும் ராமர் கோயிலின் கட்டுமானப் பணிகள் முடிவடையவுள்ள நிலையில், கோயில் கருவறையில் மூலவர் குழந்தை ராமர் சிலை வரும் 22-ஆம் தேதி பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்ள நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து வருகிற 22-ஆம் தேதி மதியம் 12.20 மணியளவில் தொடங்கும் பிரதிஷ்டை நிகழ்வு, 1 மணி வரை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடி, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், உத்தர பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், உபி மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், ராமர் கோயில் அறக்கட்டளையின் தலைவர் மஹந்த் நிருத்ய கோபால்தாஸ் உள்ளிட்டோர் முன்னிலையில் இந்நிகழ்வு நடைபெறவுள்ளது.
- அயோத்தி ராமர் கோயில் பாரம்பரிய நாகர் பாணியில் கட்டப்பட்டுள்ளது.
- கோயிலியின் நீளம் (கிழக்கு-மேற்கு) 380 அடி, அகலம் 250 அடி, உயரம் 161 அடி
- ஒவ்வொரு தளமும் 20 அடி உயரத்துடன், மூன்று அடுக்குகளைக் கொண்டது.
- கோயிலில் மொத்தம் 392 தூண்கள் மற்றும் 44 கதவுகள் உள்ளன.
- கோயிலின் வளாகத்தின் மொத்த கட்டுமானத்தில் 30% கோயில் மற்றும் மீதி 70% புல் வெளியுடன் அமைக்கப்பட்டுள்ளது
- ஐந்து மண்டபங்கள் உள்ளன. அவற்றின் பெயர்கள் ”நிருத்ய மண்டபம், ரங் மண்டபம், சபா மண்டபம், பிரார்த்தனை மற்றும் கீர்த்தனை மண்டபங்கள் ஆகும்
- கிழக்கு நுழைவு வாயிலில் வழியாக வருகை தரும் பக்தர்கள் சிங் துவார் வழியாக 32 படிக்கட்டுகளில் ஏற வேண்டும்.
- மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களின் வசதிக்காக சாய்வுதளங்கள் மற்றும் லிஃப்ட் வசதிகள் உள்ளன.
- கோயிலில் எங்கும் இரும்பு பயன்படுத்தப்படவில்லை என்று அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
- கோயில் வளாகத்தில் நான்கு மூலைகளிலும் நான்கு கோயில்கள் உள்ளன. அவை சூரியக் கடவுள், பகவதி தேவி, விநாயகர் மற்றும் சிவன் ஆகியோருக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயில்கள்.
- அதேபோல அன்னபூர்ணா ஆலயம் வடபுறத்திலும், அனுமன் ஆலயம் தெற்கிலும் உள்ளன.
- அயோத்தி ராமர் கோவிலின் அடித்தளம் 14 மீட்டர் தடிமன் கொண்ட ரோலர்-காம்பாக்ட் செய்யப்பட்ட கான்கிரீட் (RCC) அடுக்குடன் கட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் அவை செயற்கை பாறை போன்ற தோற்றத்தை அளிக்கிறது.
- நிலத்தின் ஈரப்பதத்திலிருந்து பாதுகாப்பதற்காக, கிரானைட் கற்களைப் பயன்படுத்தி 21 அடி உயர பீடம் கட்டப்பட்டுள்ளது.
- சுற்றுச்சூழல் மற்றும் நீர் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளித்து, முற்றிலும் உள்நாட்டு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கோயில் கட்டப்பட்டுள்ளதாக கோயில் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.