ராமர் கோயில் பிரதிஷ்டை விழா - அமுல் நிறுவன X தள பதிவு வைரல்!
அயோத்தியில் ராமர் கோயில் பிரதிஷ்டை விழாவை கொண்டாடும் வகையில் பால் நிறுவனமான அமுல் ராமர் கோயிலின் கலைபடத்தை தனது X தளத்தில் வெளியிட்டுள்ளது.
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த 2019-ம் ஆண்டு அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து கடந்த 2020 ஆகஸ்ட் முதல் பூமி பூஜை செய்யப்பட்டு அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 2.27 ஏக்கர் பரப்பளவில் 3 அடுக்கில் உருவாகி வரும் ராமர் கோயிலின் கட்டுமானப் பணிகள் முடிவடையவுள்ள நிலையில், கோயில் கருவறையில் மூலவர் குழந்தை ராமர் சிலை இன்று பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இதையும் படியுங்கள் : அரசியல் கலந்த ஆன்மீகத்தை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்கிறார் - அமைச்சர் சேகர் பாபு பேட்டி!
உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு அந்த நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். பகல் 12.30 மணியளவில் ராமர் கோயில் பிரதிஷ்டை நிகழ்வு நடைபெற்றது. பிரதமர் மோடி குழந்தை ராமர் சிலையை பிரதிஷ்டை செய்தார்.
இந்நிலையில், அயோத்தியில் ராமர் கோயில் பிரதிஷ்டை விழாவின் வரலாற்று நிகழ்வைக் குறிக்கும் வகையில், பால் நிறுவனமான அமுல் கொண்டாட்டங்களில் இணைந்துள்ளது. இதையடுத்து, அயோத்திய ராமர் கோயிலின் படத்தை அமுல் நிறுவனம் வெளியிட்டுள்ள நிலையில், சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
மேலும், "ஒரு பில்லியன் நம்பிக்கைகளின் கோயில்" என்று படத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. ராமர் கோயில் முன் அமுல் சிறுமி வெறுங்காலுடன் கைகளை மடக்கி நிற்பதை படம் காட்டுகிறது. இந்த பதிவு சில மணிநேரங்களுக்கு முன்பு சமூக வலைதளத்தில் பகிரப்பட்ட நிலையில், ஒரு லட்சத்திற்கும் அதிகமான விருப்பங்களைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, ஒடிசாவைச் சேர்ந்த கலைஞர் ஒருவர் 900க்கும் மேற்பட்ட தீப்பெட்டிகளைப் பயன்படுத்தி ராமர் கோயிலின் பிரதியை உருவாக்கி பலரின் கவனத்தை ஈர்த்தார். சிற்பி சாஸ்வத் ரஞ்சன் ANI இடம் கூறுகையில், "அயோத்தியின் ராமர் கோயிலின் இந்த பிரதியை முடிக்க ஆறு நாட்கள் ஆனது. இந்த திட்டத்தை முடிக்க மொத்தம் 936 தீப்பெட்டிகளைப் பயன்படுத்தினேன் . ராமர் கோயிலின் பிரதி 14 அங்குல நீளமும் ஏழு அங்குல அகலமும் கொண்டது" என கூறியுள்ளார்.