ராமர் சிலை பிரதிஷ்டை நிகழ்வை தனியார் இடங்களில் ஒளிபரப்ப அனுமதி தேவையில்லை - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.!
ராமர் சிலை பிரதிஷ்டை நிகழ்வை தனியார் கோயில்கள் மற்றும் திருமண மண்டபங்களில் நேரலை ஒளிபரப்பு செய்யவோ பூஜைகள் செய்யவோ போலீசார் அனுமதி தேவையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோயில்களில் நேரலையோ அல்லது பூஜையோ மேற்கொள்ள வேண்டுமென்றால் கோயில் செயல் அலுவலரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும். உரிய கட்டுப்பாடுகளுடன் செயல் அலுவலர் அனுமதியளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அயோத்தியில், ராமர் சிலை பிரதிஷ்டை நிகழ்ச்சியை முன்னிட்டு, சென்னை பட்டாபிராமில் உள்ள தனியார் மண்டபத்தில் பஜனைகள், அன்னதானம் நடத்த அனுமதி மறுத்த காவல் துறையினரின் உத்தரவை எதிர்த்து விவேகானந்தா இந்து இயக்கம் சார்பில் அதன் தலைவர் கணபதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
தனியார் மண்டபத்தில் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் எந்த மதத்தை பற்றியும் விவாதிக்கவில்லை என்றும், மற்ற மதத்தினர் வசிக்கும் பகுதி என்பதால் இந்த நிகழ்ச்சியை தடுக்க முடியாது அந்த மனுவில் குறிப்பிடப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ராமர் கோயில் சிலை பிரதிஷ்டை நிகழ்வை தனியார் கோயில்கள் மற்றும் திருமண மண்டபங்களில் நேரலை ஒளிபரப்பு செய்யவோ பூஜைகள் செய்யவோ போலீசார் அனுமதி தேவையில்லை என உத்தரவிட்டது. மேலும் ஒருவேளை கூட்டம் அதிகரித்தால் அதனை கட்டுப்படுத்த காவல்துறை நடவடிக்கை மேற்கொள்ளலாம் எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.