ராமா் சிலை பிரதிஷ்டை விழா: அரை நாள் விடுமுறை அறிவித்து ஜம்மு-காஷ்மீர் அரசு உத்தரவு!
அயோத்தி கோயில் ராமர் சிலை பிரதிஷ்டை விழாவையொட்டி, நாளை (ஜன. 22) அரை நாள் விடுமுறையை ஜம்மு-காஷ்மீர் அரசு அறிவித்தது.
அயோத்தியில் ராமர் கோயில், கடந்த 2020 ஆகஸ்ட் மாதம் பூமி பூஜை செய்யப்பட்டு கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 2.27 ஏக்கர் பரப்பளவில் 3 அடுக்கில் உருவாகி வரும் ராமர் கோயிலின் கட்டுமானப் பணிகள் முடிவடையவுள்ள நிலையில், கோயில் கருவறையில் மூலவர் குழந்தை ராமர் சிலை நாளை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.
இந்த விழாவில் கலந்து கொள்ள நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்காக உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு அந்த நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. இந்த நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் பங்கேற்கவுள்ளனர்.
தொடர்ந்து நாளை மதியம் 12.20 மணியளவில் தொடங்கும் பிரதிஷ்டை நிகழ்வு, 1 மணி வரை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராமர் கோயில் பிரதிஷ்டையை முன்னிட்டு பல மாநிலங்களில் விடுமுறை அளித்துள்ளதாக அறிவிப்புகள் வெளியாகின.
அந்த வகையில் அரைநாள் விடுமுறையை அறிவித்து ஜம்மு காஷ்மீர் பொது நிர்வாகத் துறைச் செயலர் சஞ்சீவ் வர்மா உத்தரவிட்டுள்ளார்.