ராம், அபர்ணா, மைதிலி, பியானோ... தமிழ் சினிமாவின் பொக்கிஷம் ‘ஹேராம்’ திரைப்படத்திற்கு 24 வயது!
நடிகர் கமல்ஹாசனின் காவியப்படைப்பான ‘ஹேராம்’ திரைப்படம் வெளியாகி 24 ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து, இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
கடந்த 2000ஆம் ஆண்டு கமல்ஹாசன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘ஹே ராம்’. ஷாருக்கான், ஹேமா மாலினி, ராணி முகர்ஜி, நஸ்ருதின் ஷா, ஓம் பூரி, விக்ரம் கோகலே, நாசர், அப்பாஸ், ஒய்.ஜி. மகேந்திரன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருந்தனர். படத்துக்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.
மகாத்மா காந்தியை, கோட்சே கொன்றது குறித்த கதையை அடிப்படையாக கொண்ட இப்படம் வெளியானபோது ரசிகர்களிடையே பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. கடந்த ஆண்டு சுதந்திர தினத்தையொட்டி இப்படம் ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டது. ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான பிரசாத் கார்ப் நிறுவனம் தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, 12k தரத்தில் படத்தினை ரீகிரியேட் செய்துள்ளது படக்குழு. மேலும் 12K தரத்தில் இப்படத்தினை காண திரையரங்குகள் உலகில் எங்கும் இன்னும் அமைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ‘ஹேராம்’ திரைப்படம் வெளியாகி இன்றுடன் 24 ஆண்டுகள் நிறைவடைந்ததாகவும், அதற்காக படத்தின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் இண்டர்நேஷனல் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.