33 பேரை பலி கொண்ட தீ விபத்து: ராஜ்கோட் நகராட்சிக்கு குஜராத் உயர்நீதிமன்றம் கண்டனம்!
ராஜ்கோட் விளையாட்டு மைய தீ விபத்து குறித்து தாமாக முன் வந்து விசாரணை செய்த குஜராத் உயர்நீதிமன்றம் ராஜ்கோட் நகராட்சிக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரில் சிறுவர்களுக்கென பிரத்யேகமான டிஆர்பி விளையாட்டு மையம் (TRP game zone) இருந்தது. தனியாருக்கு சொந்தமான இந்த விளையாட்டு மையத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினருக்குமான விளையாட்டுகள், பொழுதுபோக்கு தளங்கள், உணவு விடுதிகள் உள்ளிட்டவை இருந்தன.
தற்போது கோடை விடுமுறை என்பதால் சிறுவர்கள், சிறுமியர்கள், என பலரும் இந்த டிஆர்பி விளையாட்டு மையத்திற்கு நேற்று முன்தினம் வருகை தந்தனர். இந்நிலையில் அங்குள்ள ஒரு அறையில் எதிர்பாராத வகையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ சற்று நேரத்துக்குள்ளாக விளையாட்டு மையம் முழுவதும் பரவியது.
இதனால் அந்தப் பகுதியே புகை மண்டலம் ஆனது. இந்த பயங்கர தீ விபத்தில் சிக்கி தற்போது வரை 9 குழந்தைகள் உள்பட 33 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை இந்த தீ விபத்து ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநில முதலமைச்சர் பூபேந்திர பட்டேல், உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி ஆகியோர் விபத்து குறித்து விசாரணை நடத்த சிறப்பு விசாரணை குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளனர். தீ விபத்தில் சிக்கியவர்களது உடல்கள் அடையாளம் தெரியாத அளவிற்கு எரிந்து இருப்பதால் அவர்களுக்கு டிஎன்ஏ சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ. 4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என முதலமைச்சர் பூபேந்திர பட்டேல் அறிவித்துள்ளார். மேலும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரம் நிவாரணமாக வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீ விபத்து குறித்து தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்ட குஜராத் சிறப்பு நீதிமன்றம், ராஜ்கோட் நகராட்சிக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக நீதிபதிகள் கூறியதாவது :
"மனித தவறால் ஏற்பட்ட விபத்தில் அப்பாவி குழந்தைகள் பலியாகி விட்டனர். ராஜ்கோட் விளையாட்டு மையத்தின் தீ விபத்து நடைபெறும் வரை 4 ஆண்டுகள் நகராட்சி என்ன செய்தது? முறையான பராமரிப்பு இல்லாத விளையாட்டு மையத்திற்கு அனுமதி வழங்கியது ஏன்?" என கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் நகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டதாக குஜராத் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.