For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தகவல் தொழில்நுட்ப புரட்சியின் நாயகன் ராஜீவ் காந்தி!

10:23 AM May 21, 2024 IST | Web Editor
தகவல் தொழில்நுட்ப புரட்சியின் நாயகன் ராஜீவ் காந்தி
Advertisement

நவீன அறிவியல் தொழில்நுட்பம்,  கணினி உள்ளிட்ட சேவைத்துறை, டிஜிட்டல் துறைகளில் நாடு உச்சம் தொட,  அன்றே அடித்தளமிட்ட முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினம் இன்று.  அவரைப்பற்றிய ஒரு செய்தி தொகுப்பை காணலாம்.

Advertisement

ஐந்தாண்டு திட்டங்கள் மூலம்,  இந்தியாவை வலுவாக கட்டமைத்தவர் முன்னாள் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு. நேருவின் மகள் இந்திரா காந்தி - பெரோஷ் காந்தி தம்பதிக்கு மகனாக 1944 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20 ஆம் தேதி மும்பையில் பிறந்தார் ராஜிவ் காந்தி. இவரின் தம்பி சஞ்சய் காந்தி.

சிறுவயதிலே படிப்பிலும்,ஓவியம் வரைவதிலும் ஆர்வமாக இருந்த ராஜீவ்  பள்ளிக்கல்வியை மும்பை, டேராடூன் பிறகு சுவிட்சர்லாந்திலும் படித்தார்.  பிரிட்டனின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்து தாயகம் திரும்பினார்.  இந்தியன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தில் விமானியாக பணிபுரிந்தார்.
1968 ஆம் ஆண்டு இத்தாலியை சேர்ந்த சோனியாவை காதலித்து கரம் பிடித்தார்.  ராஜீவ் - சோனியா தம்பதிக்கு ராகுல் ,பிரியங்கா என இகுழந்தைகள்.

பிரதமராக இருந்த அன்னை இந்திரா காந்தியிடம், இன்ஜினியரிங்,  நவீன தொழில் நுட்ப வளர்ச்சி குறித்தும்,  அதே போல இந்தியாவிலும் வளர வேண்டும் என அடிக்கடி குறிப்பிடுவார்.  கூடவே, ஆலோசனையும் வழங்குவார்.

எனக்கு அரசியலே வேண்டாம்,  நான் குடும்ப தலைவன்.  என்னை விடுங்கள். அரசியலில் உங்களுடன் சஞ்சய் பயணிப்பது போதாதா என்பார் ராஜீவ்.

1981 ஆம் ஆண்டு விமான விபத்தில் சஞ்சய் காந்தி மரணித்த பின்,  தனிப்பட்ட லட்சியங்களை தாய் இந்திராவுக்காகவும்,  தாய் நாட்டிற்காகவும் தியாகம் செய்தார் ராஜீவ்.
தாயின் கட்டளையை ஏற்றார்.  தன் தம்பி சஞ்சய்காந்தி எம்.பியாக இருந்த அமேதி தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு வென்றார்.  ஆட்சியில் எம்.பி பதவி,  காங்கிரஸ் கட்சியில் பொதுச்செயலாளர் பதவியையும் ஏற்று தீவிர அரசியல்வாதி அவதாரம் எடுத்தார்.

பஞ்சாப் மாநிலத்தை பிரித்து,  காலிஸ்தான் தனி நாடு கேட்ட சீக்கிய தீவிரவாதிகளை ஆபரேசன் ப்ளு ஸ்டார் மூலம் ஒடுக்கினார் இந்திரா காந்தி. அதற்கு பழி வாங்கும் விதமாக, காவல் துறையில் இருந்த  சீக்கிய அலுவலர்களால் பிரதமர் இந்திராகாந்தி படு கொலை செய்யப்பட்டார்.

அதனையடுத்து 40 வயது இளைஞரான ராஜீவ் காந்தி இந்திய பிரதமராகவும்,  காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் பதவியேற்றார். அடுத்த சில மாதங்களில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் 414 எம்.பிக்களை காங்கிரஸ் வென்று வரலாற்று சாதனை படைத்தது.  மீண்டும் பிரதமராக பதவியேற்ற ராஜிவ் காந்தி, வி.பி.சிங், மாதவராவ் சிந்தியா, ராஜேஷ் பைலட்,  ப.சிதம்பரம்,  குலாம் நபி ஆசாத் போன்ற இளம் எம்.பிக்களை அமைச்சரவையில் சேர்த்து கொண்டார். இளைஞர்களுக்கு பல வகைகளில் உத்வேகம் அளித்தார்.

அறிவியல் தொழில் நுட்பம்,  நவீன இயந்திரங்கள்,  சூப்பர் கம்ப்யூட்டர், பாதுகாப்பு துறையில் உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பு, விண்வெளியில் தன்னிறைவடைய கிரையோஜெனிக் இயந்திரம் வடிவமைக்க அப்துல் கலாம் உள்ளிட்ட அறிஞர்களை ஊக்குவித்தார்.  நவீன அறிவியல் தொழில் நுட்பத்தை நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்துதலில் வெற்றி கண்டார்.

அரசு துறைகளில் தாமதத்தை குறைத்தார்,  அரசு செலவிடும் தொகையில், எவ்வளவு தொகை மக்களுக்கு சென்றடைகிறது என்பதை வெளிப்படையாக பேசியதுடன் அரசு இயந்திரத்தை சிறப்பாக செயல்பட முடுக்கி விட்டார்.  உள்ளாட்சி அமைப்புகள் தனித்து செயல்பட பஞ்சாயத்து ராஜ் திட்டத்தை கொண்டு வந்தார்.  நாடு முழுவதும் தொலை தொடர்பு வசதியை வேகமாக பரவலாக்கினார். கிராமப்புற மேம்பாடு,  விவசாய மேம்பாடு, சுகாதார வசதியில் அதிக கவனம் செலுத்தினார்.  ஒரு புறம் ஆட்சி,  மறுபுறம் கட்சி என இரண்டு அமைப்புகளிலும் சீர்திருத்தங்களை கொண்டு வந்தார்.

யானைக்கும் அடி சறுக்கும் என்பதை போல்,  தாய் இந்திராவின் கொள்கையை மீறி தவறான வழிகாட்டுதலால்,  இலங்கையில் தமிழர் -சிங்களர் விவகாரத்தில், சிங்களர்களுக்கு  ஆதரவாக, இந்திய அமைதிப்படையை அனுப்பி சர்ச்சைக்குள்ளானார். மறுபுறம் போபர்ஸ் பீரங்கி கொள்முதலில் பிரதமருக்கு நெருக்கமானவர் என்று பேசப்பட்டதால்,  எதிர்க்கட்சியினர் ஒன்று சேர்ந்து ராஜீவ் காந்தி என்ற பிம்பத்தை சிதைத்தனர்.

1989 ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்தது.  ஜனதா கட்சி சார்பில் பாஜக
ஆதரவுடன் வி.பி.சிங் பிரதமரானார்.  பிறகு காங்கிரஸ் ஆதரவுடன் சந்திரசேகர் பிரதமர் ஆனார்.

ஜனதா ஆட்சிகள் கவிழ்ந்த பின் 1991 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது.
இம்முறை ஆட்சியில் தவறுகளை திருத்தி கொள்வேன் என்ற ராஜீவ் காந்தி மக்கள் நல
திட்டங்களை செயல்படுத்த நிபுணர் குழுக்களை அமைத்தார்.  ஆட்சி அமைத்த பின் ஒவ்வொரு வாக்குறுதிகளையும் நிறைவேற்றும் காலத்தையும் குறிப்பிட்டார்.

மே 21 தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்னை வந்த ராஜீவ் காந்தி பூந்தமல்லியில் தன் அன்னை
இந்திரா காந்தி சிலையை திறந்து வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பிரச்சார மேடைக்கு சென்ற போது மாலை அணிவிக்க வந்த பெண்,  தன் உடலில் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டை இயக்கியதால் உடல் சிதறி கொல்லப்பட்டார் ராஜீவ் காந்தி.

ராஜீவ் மறைந்த  சில ஆண்டுகளில், மோட்டார் வாகன உற்பத்தி,எலக்ட்ரானிக் உற்பத்தி, என உலக வரைபடத்தில் சிறப்பான இடம் பிடித்தது இந்திய நாடு.  இந்த அளப்பரிய சாதனைகளில் ராஜீவ் காந்தி உயிர் நீத்த ஸ்ரீபெரும்புதூரும் முக்கிய பங்கு வகித்து... ராஜீவின் கனவுகளை நனவாக்கி வருகிறது என்றால் மிகையில்லை...

Tags :
Advertisement