ரஜினியின் 74வது பிறந்தநாள்... 300 கிலோ கருங்கல்லில் சிலை வடித்து வழிபாடு செய்த ரசிகர்!
நடிகர் ரஜினியின் 74வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது தீவிர ரசிகர் ஒருவர் 300 கிலோ எடையில் அவரின் உருவச்சிலையை பிரதிஷ்டை செய்து, வழிபாடு மேற்கொண்டுள்ளார்.
திருமங்கலத்தில் முன்னாள் ராணுவ வீரர் கார்த்திக் என்பவர், தமிழ் திரைப்பட நடிகர் ரஜினியின் மீது கொண்டுள்ள தீவிர அன்பால் 'அருள்மிகு ஸ்ரீ ரஜினி கோயில்' என்ற பெயரில் கோயில் ஒன்றை உருவாக்கி, கடந்த சில ஆண்டுகளாக வழிபாடு செய்து வருகிறார். தினந்தோறும் இருவேளைகளிலும் இந்த கோயிலில் பொங்கல் வைத்து, வழிபாடு செய்து வருகிறார்.
அண்மையில் கூட நவராத்திரியை ஒட்டி, ரஜினிகாந்தின் முதல் படம் முதல் தற்போது வரை அவரது நடிப்பில் வெளிவந்த அனைத்து படங்களின் புகைப்படங்களையும் வைத்து கொலு கொண்டாடினார். இந்நிலையில் ரஜினியின் 74வது பிறந்தநாளை முன்னிட்டு 300 கிலோ எடையில் புதிய ரஜினி சிலை ஒன்றை அக்கோயிலில் பிரதிஷ்டை செய்துள்ளார்.
முன்னரே அக்கோயிலில் 250 கிலோ எடையில் ரஜினி சிலை உள்ளது குறிப்பிடதக்கது. பழைய சிலை 250 கிலோ எடையும், 3 அடி உயரமும் கொண்டதாகும். தற்போது பிரதிஷ்டை செய்யப்பட்ட இந்த சிலை 300 கிலோ எடையும், 3.5 அடி உயரத்தில் முழுவதும் கருங்கல்லால் ஆன சிலை ஆகும். பழைய சிலை மூலவராகவும், தற்போதைய சிலை உற்சவராகவும் ரஜினி கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
தற்போது இந்த புதிய சிலைக்கு பால், பழம், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், பூந்தி ஆகியவைகளால் அபிஷேகம் செய்து, யாகம் வளர்த்து, ரஜினி நூற்றாண்டுகள் வாழ வேண்டும் எனவும் அவரது குடும்பத்தினர் பிரார்த்தனை மேற்கொண்டனர்.