போயஸ் கார்டனில் ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த்!
சென்னை போயஸ் கார்டனில் தனது இல்லத்திலிருந்து ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார்.
உலகம் முழுவதும் 2025 ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் பலரும் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர். மேலும் பொதுமக்கள் கடற்கரை, நட்சத்திர விடுதிகளில் வாண வேடிக்கையுடன் ஆங்கில புத்தாண்டை உற்சாகத்துடன் வரவேற்றனர். சென்னை மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரைகளில் ஆட்டம், பாட்டத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.அதே போல் கோயில்கள்,தேவாலயங்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதனிடையே, ரஜினிகாந்த் பாட்ஷா பட வசனத்தை குறிப்பிட்டு மக்களுக்கு ஆங்கில புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில், “நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான். கை விட மாட்டான். கெட்டவங்களுக்கு ஆண்டவன் நிறைய கொடுப்பான். ஆனா கை விட்டுடுவான்.” புத்தாண்டு நல்வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் ரஜினிகாந்த், சென்னை போயஸ் கார்டனில் உள்ள இல்லத்தில் இருந்து தனது ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார். ரஜினிகாந்தை பார்ப்பதற்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து ரசிகர்கள் வருகை தந்திருந்தனர். ரஜினிகாந்தின் உருவம் வரையப்பட்ட கேலண்டர்களோடு ரசிகர்கள் ரஜினிகாந்தின் இல்லத்திற்கு முன்பு சூழ்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.