இடமில்லாமல் ஒதுக்கப்பட்ட பாட்டு : ”எப்படியாவது சேர்த்துவிடுங்கள்" என்று பதறிய ரஜினி - ’மனிதன்’பட அனுபவங்களை பகிர்ந்த வைரமுத்து..!
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் கடந்த 1987 ஆம் ஆண்டு வெளியான படமான ‘மனிதன்’ திரைப்படத்தினை டிஜிட்டல் முறையில் மாற்றி 38 ஆண்டுகள் கழித்து, வரும் அக்டோபர் 31ம் தேதி ரிலீஸ் செய்கிறார்கள்.
எஸ்.பி முத்துராமன் இயக்கிய இப்படத்தில் ரஜினி, ரூபினி, ஸ்ரீவித்யா, ரகுவரன் மற்றும் செந்தில் ஆகியோர் நடித்திருந்தனர். சந்திரபோஸ் இசையமைத்திருந்த மனிதன் படத்தின் அனைத்து பாடல்களையும் கவிஞர் வைரமுத்து எழுதியிருந்தார். இதில் மலேசியா வாசுதேவன் குரலில் ஒலிக்கும் ‘மனிதன் மனிதன்’ என்ற பாடல் இடம்பெற்றிருந்தது. அப்பாடல் குறித்த சுவாரஸ்யமான தகவல்களை கவிஞர் வைரமுத்து வெளிப்படுத்தியிருக்கிறார்.
இது குறித்து வைரமுத்து வெளியிட்டுள்ள பதிவில்,
”மனிதன்' திரைப்படம் மறுவெளியீடு காண்பது மகிழ்ச்சி. இன்னோர் இசையமைப்பாளர் உச்சத்திலிருந்த காலகட்டத்தில் அதிகம் புகழ்பெறாத சந்திரபோஸை அழைத்து என்னிடம் ஆறு பாடல்களை ஒப்படைத்தது ஏவி.எம் நிறுவனம். அத்துணை பாடல்களும் அதிரி புதிரி.
ஏவி.எம் அலுவலகத்துக்கு சிற்றுண்டி உண்ணவந்த ரஜினிகாந்த் பக்கத்து அறையில் ஓடிக்கொண்டிருந்த ஒரு பாடலைக்கேட்டு "நல்லா இருக்கே; இது யார் படத்துக்கு"என்று கேட்டார் மனிதன் படத்துக்காக ஒலிப்பதிவு செய்யப்பட்டு இடமில்லாமல் ஒதுக்கப்பட்ட பாட்டு என்றார்கள் "அய்யய்யோ! எவ்வளவு நல்ல பாட்டு; எப்படியாவது சேர்த்துவிடுங்கள்" என்று ரஜினி பதறினார்; அதனால் அதைத் தலைப்புப் பாடலாக இணைத்தார். இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் அதுதான் 'மனிதன் மனிதன் எவன்தான் மனிதன்’ என்ற பாட்டு பின்னாளில் தேசியகீதமாய்த் தெருத்தெருவாய் ஒலித்த பாட்டு. மனிதன் படத்தை நினைத்தால் என் பாட்டுப் பொருளை மீட்டுக்கொடுத்த ரஜினிதான் என் நினைவுக்கு வருவார்” என்று தெரிவித்துள்ளார்.