“ரஜினிகாந்த் நலமாக உள்ளார்… 2 நாட்களில் வீடு திரும்புவார்…” - #Apollo மருத்துவமனை அறிவிப்பு!
ரஜினிகாந்த் நலமாக உள்ளார்; 2 நாட்களில் வீடு திரும்புவார் என அப்பல்லோ மருத்துவமனை அறிவித்துள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் நேற்றிரவு திடீரென சென்னையில் உள்ள ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அடிவயிற்று பகுதியில் வீக்கம் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், பரிசோதனைகள் மற்றும் உரிய சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு விரைவில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் எனவும் தகவல்கள் வெளியானது.
பின்னர் அவருக்கு ரத்தநாளத்தில் அடைப்பு இருப்பதாக தகவல் வெளியானது. இதனை தொடர்ந்து அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்ட் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாகவும், ஐசியூ-வில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது. 24 மணி நேரம் ஐசியூ-வில் இருப்பார். அதன்பின் சாதாரண வார்டுக்கு மாற்றப்படுவார் எனவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இருதய சிகிச்சை சிறப்பு மருத்துவர் சாய் சதீஷ் தலைமையில் மருத்துவக்குழுவினர் நடிகர் ரஜினியின் உடல்நிலையை கண்காணித்து வந்ததாகவும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தன.
இந்நிலையில், அப்பல்லோ மருத்துவமனை தரப்பில் மருத்துவ அறிக்கை வெளியாகியுள்ளது. அதில், ரஜினிகாந்திற்கு சிகிச்சை முடிந்துள்ளதாகவும், அவர் நலமுடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் 2 நாட்களில் வீடு திரும்புவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஜினிகாந்தின் உடல்நிலை குறித்து அப்பல்லோ மருத்துவமனை தரப்பில் வெளியான அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
“சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் செப்டம்பர் 30-ஆம் தேதி நடிகர் ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்டார். அவரது இதயத்துக்கு செல்லும் முக்கிய ரத்த நாளத்தில்(ஆர்டா) ரத்தக் கசிவு இருப்பது பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளாமல் எண்டோவாஸ்குலர் சிகிச்சை முறையில் ரத்த நாளத்தில் ஏற்பட்ட கசிவை சரிசெய்ய ஸ்டென்ட் பொருத்தப்பட்டுள்ளது. திட்டமிட்டபடி, ரஜினிகாந்த்துக்கு மேற்கொள்ளப்பட்ட சிகிச்சை நல்ல முறையில் முடிக்கப்பட்டதை அவரின் ரசிகர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம். ரஜினிகாந்தின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது. அவர் நலமுடன் இருக்கிறார். இன்னும் இரண்டு நாள்களில் வீடு திரும்புவார்” என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.