காக்கா, கழுகு கதைக்கு முற்றுப்புள்ளி வைத்த ரஜினி...! - என்ன சொன்னார் தெரியுமா?
விஜய்க்கும் எனக்கும் போட்டி என்று கூறுவது மிகவும் கவலை அளிப்பதாக கூறிய நடிகர் ரஜினிகாந்த், நடிகர் விஜய் எனக்கு போட்டி என நினைத்தால் அது எனக்கு மரியாதை இல்லை, நானும் விஜய்க்கு போட்டி என நினைத்தால் அது அவருக்கு மரியாதை இல்லை என்று தெரிவித்தார்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கடந்த 2012-ம் ஆண்டு தனது கணவர் தனுஷ் நடிப்பில் வெளியான ‘3’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து 2015-ம் ஆண்டு கௌதம் கார்த்திக் நடிப்பில் ”வை ராஜா வை” என்ற படத்தை இயக்கினார்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் மூன்றாவது திரைப்படமான ‘லால் சலாம்’ படம் தற்போது உருவோகி ரிலீஸுக்காக காத்திருக்கிறது. கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து, எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் ‘மொய்தீன் பாய்’ எங்ற சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில், சென்னையில் இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், திரைப்பட இயக்குநர் ரவிக்குமார், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.இந்நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது :
“நடிகர் விஜய் எனக்கு முன்னாள் வளர்ந்த பையன். நடிகர் விஜயை சின்ன வயதிலிருந்தே பார்த்து வருகிறேன். தர்மத்தின் தலைவன் படப்பிடிப்பின் போது, விஜயின் தந்தை என்னிடம் வந்து, என்னுடைய பையன் படித்து வருகிறான். அவனுக்கு நடிப்பின் மீது ஆர்வம் அதிகமாக உள்ளது. நீங்கள் கூறுங்கள் அவன் படித்துவிட்டு வந்தவுடன் நடிக்க வேண்டுமென தெரிவித்தார். அதன்பிறகு விஜய் நடிப்பிற்கு வந்து, உழைப்பால் உயர்ந்து உள்ளார். தற்போது நன்றாக நடித்து வருகிறார். தற்போது அரசியலுக்கு வரும் முயற்சியில் உள்ளார். அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
தற்போது விஜய்க்கும் எனக்கும் போட்டி என கூறுவது மிகவும் கவலை அளிக்கிறது. அவரும் மேடையில் ‘எனக்கு போட்டி நான் தான்’ என கூறியுள்ளார். நடிகர் விஜய்யை எனக்கு போட்டியாக நினைத்தால் அது எனக்கு மரியாதை இல்லை. விஜய்யும் என்னை போட்டியாக நினைத்தால் அது அவருக்கு மரியாதை இல்லை. தயவுசெய்து என்னுடைய ரசிகர்களும், அவருடைய ரசிகர்களும், காக்கா கழுகு கதையை இத்துடன் நிறுத்திக் கொள்ளவேண்டும்”
இவ்வாறு நடிகர் ரஜினிகாந்த் பேசினார்.