For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ரஜினி பிறந்தநாள் ஸ்பெஷல் | “இந்திய சினிமாவின் முதல் கருப்பு ஹீரோ, சூப்பர் ஸ்டாரானது எப்படி? 73 வயதிலும் அலப்பறை கிளப்பும் ரகசியம் என்ன?

10:41 AM Dec 12, 2023 IST | Web Editor
ரஜினி பிறந்தநாள் ஸ்பெஷல்   “இந்திய சினிமாவின் முதல் கருப்பு ஹீரோ  சூப்பர் ஸ்டாரானது எப்படி  73 வயதிலும் அலப்பறை கிளப்பும் ரகசியம் என்ன
Advertisement

அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்கிற கேள்வி பல ஆண்டுகளாக கோடம்பாக்கத்தைச் சுற்றி வருகிறது.  ஆனால் தமிழ்நாட்டின் ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினி மட்டுமே என்பதற்கு 72 வயதிலும் 600 கோடிக்கும் மேல் வசூலில் சாதனை படைத்த ஜெயிலர் திரைப்படமே சாட்சி..  73 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் சூப்பர் ஸ்டார் குறித்த சிறப்பு செய்தித்தொகுப்பை பார்க்கலாம்.

Advertisement

கமல்ஹாசன் கதாநாயகனாக அறிமுகமான காலகட்டம்... 1975 ஆம் ஆண்டு 10 திரைப்படங்கள் கமல் வசம் இருந்தன.  அதில் ஒரு திரைப்படம் அபூர்வ ராகங்கள். கே.பாலசந்தர் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் பாண்டியன் கதாபாத்திரத்தில் தோன்றி அறிமுக நடிகர் பின்னாளில் தமிழ்நாட்டு ரசிகர்களின் சூப்பர் ஸ்டார் ஆக உருவெடுப்பார் என்று யாராலும் யூகித்திருக்க முடியாது.

அபூர்வராகம் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களுக்கு ராகங்களின் பெயரில் ஒரு கார்டு போட்டிருப்பார் இயக்குநர்.  ரஜினி திரையில் தோன்றும் போது சுருதிபேதம் என கார்டு போட்டார் கே.பாலசந்தர்.  வீட்டில் மாடியில் மேலே நின்று கமல் கேள்வி கேட்க,  ரஜினி கீழே நின்று பதில் சொல்லும்படி காட்சி அமைக்கப்பட்டிருக்கும்.  மேலும் ரஜினி ஏற்ற பாண்டியன் கதாபாத்திரம் ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனிதனுடையது.   இப்படி முழுக்க முழுக்க எதிர்மறையான கதாபாத்திரத்தில் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் ரஜினிகாந்த்.

ஆனால் அந்த அறிமுகம் அவரை முடக்கிவிடவில்லை.  அடுத்தடுத்து தமிழ், தெலுங்கு, கன்னடம் என 26 படங்களில் நடித்த ரஜினி 1978 ஆம் ஆண்டு வெளியான பைரவி படம் மூலம் கதாநாயகனாக அவதாரமெடுத்தார்.  அந்த படத்தின் விநியோக உரிமைபெற்ற எஸ். தாணு கட் அவுட்களில் சூப்பர் ஸ்டார் ரஜினி என விளம்பரப்படுத்தினார். அதில் ரஜினிக்கு உடன்பாடு இல்லாமல் இருந்தாலும்,  1980ம் ஆண்டு வெளியான ’நான் போட்ட சவால்’ திரைப்படம் மூலம் சூப்பர் ஸ்டார் பட்டம் அவருக்கு நிரந்தரமானது.

ஆறிலிருந்து 60 வரை,  முள்ளும் மலரும்,  புதுக்கவிதை என நடிப்புக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளில் ரஜினி அசத்தினாலும்,  ரசிகர்களை அவரை நோக்கி ஈர்த்தது இயல்பிலேயே அவருக்கு வாய்த்த ஸ்டைல்தான். ரஜினியின் நடை,  உடை பாவனைகளில் இரண்டற கலந்திருந்த அந்த மேனரிசத்தை தமிழ்நாட்டு ரசிகர்கள் தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடினர்.

பின்னாளில் அந்த ஸ்டைல் அவரை ஜப்பான் வரை கொண்டு சென்றது என்பது ஊரறிந்த கதை.  தன்னுடைய திரைப்படத்தில் மறைமுகமாகவோ,  நேரடியாகவோ அரசியல் பேசிய ரஜினி,  கட்சி தொடங்குவதற்கான ஆயத்த வேலைகளைத் தொடங்கியதோடு, அனைத்து மாவட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகளை அழைத்து கூட்டம் நடத்தி புகைப்படங்களும் எடுத்துக் கொண்டார்.  ஆனால் தமிழ்நாட்டு அரசியல் சதுரங்கம் ரஜினிக்கு கடைசி வரை கை கூடவே இல்லை என்றாலும்,  அவரது வார்த்தைகள் அரசியலில் எப்பொதுமே தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவையாக இருந்து வருகின்றன.

ஆனால் தமிழ்நாட்டு ரசிகர்களைப் பொறுத்தவரை ரஜினி தான் கடந்த 40 ஆண்டுகளாக ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்.  அடுத்த சூப்பர் ஸ்டார் தொடர்பான பேச்சுக்கள் எழும் போதுதெல்லாம் அந்த பட்டம் ரஜினியை தவிர வேறு யாருக்கும் பொருந்தாது என்பதை அவரே நிரூபித்துக் கொண்டு இருக்கிறார்.

தன்னுடைய 44 ஆண்டுகால சினிமா வரலாற்றில் 169 படங்களில் நடித்துள்ள ரஜினிக்கு இன்றும் கைவசம் 2 படங்கள் இருக்கின்றன.  அவரது கால்ஷீட் கிடைக்காதா என இயக்குநர்களும்,  தயாரிப்பாளர்களும் காத்திருக்கின்றனர்.  பாபா படத்தில் ரஜினிக்கு கிடைத்த மந்திரம் மூலம் 7 வரங்கள் கிடைக்கும்.  ஆனால் ரஜினி ரசிகர்களுக்கு கிடைத்த சூப்பர் ஸ்டார் என்கிற வரம் என்றென்றைக்கும் ரஜினி மட்டுமே.

Advertisement