"ரசிகர்கள் 10 நாட்களுக்கு மேல் எந்த திரைப்படத்தையும் பார்ப்பதில்லை" - முன்னாள் அமைச்சர் #Rajendrabalaji பேட்டி!
திரைப்படங்கள் ஒரு வாரத்திற்கு மேல் ஓட வேண்டும் என்பது தற்போது கடினமாக உள்ளதாகவும், ரசிகர்கள் பத்து நாட்களுக்கு மேல் எந்த திரைப்படத்தையும் பார்ப்பதில்லை எனவும் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் விஸ்வகர்ம மகாஜன சங்கம் சார்பில் விஷ்வப்பிரம்ம ஜெயந்தி மற்றும் ஆராதனை விழா நடைபெற்றது. விஸ்வகர்மா உயர்நிலைப்பள்ளி அருகே நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் அமைச்சர்கள் கே.டி.ராஜேந்திர பாலாஜி, கடம்பூர் செ.ராஜூ மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
விழா மேடையில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேசியதாவது,
“திரைப்படங்கள் ஒரு வாரத்திற்கு மேல் ஓட வேண்டும் என்பது தற்போது கடினமாக உள்ளது. ரசிகர்கள் பத்து நாட்களுக்கு மேல் எந்த திரைப்படத்தையும் பார்ப்பதில்லை. ஆனால் தென்னகத்தின் சூப்பர் ஸ்டார் எம்.கே. தியாகராஜர் பாகவதர் நடித்த 'ஹரிதாஸ்' திரைப்படம் மூன்றாண்டுகள் ஓடி சாதனை படைத்தது. அந்தச் சாதனையை எந்த நடிகரும் தற்போது வரை முறியடிக்கவில்லை. நான் பார்த்து வியந்த நடிகர் எம்.கே.தியாகராஜ பாகவதர் என அன்று எம்ஜிஆர் குறிப்பிட்டார். விஸ்வகர்மா சமூகத்திற்கு அரசியல் அங்கீகாரம் கொடுத்தது அதிமுக தான். என்றும் விஸ்வகர்மா சமூக மக்கள் அதிமுகவிற்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.
இதையும் படியுங்கள் : AssemblyElections – ஜம்மு-காஷ்மீரில் இன்று முதல்கட்ட வாக்குப்பதிவு!
கேரளா, குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களில் விஸ்வகர்மா சமூகத்திற்கு இடஒதுக்கீடு உள்ளது. தமிழ்நாட்டில் நாம் ஒற்றுமையாக இருந்தால்தான் நாம் நினைத்த காரியத்தை நிறைவேற்ற முடியும். சேகுவாரா, நேதாஜி, பசும்பொன் முத்துராமலிங்க தேவர், டாக்டர் அம்பேத்கர் வரலாறுகளை படிக்க வேண்டும்.
நம்மை நம்புபவர்களுக்கு உயிரை கொடுப்போம். நம்மை ஏமாற்ற நினைத்தால், நம்மை
ஒடுக்க நினைத்தால் அதற்கான விலையை சம்பந்தப்பட்டவர்கள் கொடுக்க வேண்டிய வரும் என்பதை உணர்த்தும் வகையில் நமது பயணம் இருக்க வேண்டும்."
இவ்வாறு அவர் தெரிவித்தார்.