#NEET | தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட நீட் தேர்வு மாணவர்... ராஜஸ்தானில் தொடரும் துயரம்!
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்த 21 வயது மாணவர் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் பர்சானாவின் மதுரா பகுதியை சேர்ந்தவர் பர்சுராம் (21). இவர் நீட் தேர்வுக்கு தயாராவதற்காக கடந்த ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவுக்கு வந்தார். தொடர்ந்து, அவர் அங்குள்ள பயிற்சி மையம் ஒன்றில் பயிற்சி பெற்றபடி, தனியாக அறை எடுத்து தங்கியிருந்தார். இந்த நிலையில் பர்சுராம் நீண்ட நேரமாக வெளியில் வராததால் அவர் தங்கி இருந்த வீட்டின் உரிமையாளர் அனூப் குமார் சந்தேகம் அடைந்துள்ளார். இதனையடுத்து அனூப் குமார், நேற்று இரவு 11.30 மணியளவில் பர்சுராம் தங்கியிருந்த அறையின் கதவை தட்டியுள்ளார். நீண்ட நேரமாக தட்டியும் திறக்காததால், அவர் காவல்துறைக்கு தகவல் அளித்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் அறையின் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது, பர்சுராம் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார். அவரின் உடல் எம்.பி.எஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பர்சுராமின் குடும்பத்தினர்கள் அங்கு வந்தபின்னர் உடற்கூராய்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பர்சுராம் உயிரை மாய்த்துக் கொண்டதற்கான காரணம் தெளிவாக தெரியவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடந்து வருகின்றனர்.
ஜேஇஇ மற்றும் நீட் போன்ற போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையங்கள் அதிகம் உள்ள இடமாக திகழும் கோட்டாவில் இந்த ஆண்டு மட்டும் இதுவரை 13 பேர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்கவும், உயிரை மாய்த்துக்கொள்வதை தடுக்கவும் கோட்டா காவல்துறை மற்றும் உள்ளூர் நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை எடுத்துவரும் நிலையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.