ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 224 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில், 6 விக்கெட் இழப்பிற்கு 223 ரன்களை குவித்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.
2024 ஆம் ஆண்டின் ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 22 ஆம் தேதி சென்னை சேப்பாக்கதில் தொடங்கி நடைபெற்று வருகிறது. 31வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனையடுத்து களமிறங்கிய கேகேஆர் அணியில், பில் சால்ட் மற்றும் சுனில் நரைன் முதலில் களமிறங்கினர். 4வது ஓவரில் 10 ரன்களில் ஆவேஷ் கான் பந்தில் பில் சால்ட் ஆட்டமிழந்தார். ஆனால் சுனில் நரைன் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். அடுத்ததாக களமிறங்கிய ஆங்க்ரீஷ் ரகுவன்ஷி 30 ரன்களில் அவுட்டானார். இதையடுத்து நரேனுடன் ஸ்ரேயாஸ் ஐயர் ஜோடி சேர்ந்தார். இதில் ஸ்ரேயாஸ் ஐயர் 11 ரன்னில் அவுட் ஆனார்.
இதையடுத்து ரசேல் களமிறங்கினார். தொடர்ந்து அதிரடி காட்டி வந்த நரேன் 49 பந்துகளில் சதம் விளாசினார். ரசல் 13 ரன்னிலும், 11 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள் என அதிரடி காட்டிய சுனில் நரைன் 109 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதையடுத்து ரிங்கு சிங் மற்றும் வெங்கடேஷ் ஐயர் ஜோடி சேர்ந்தனர். 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 223 ரன்கள் எடுத்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ். ராஜஸ்தான் தரப்பில் அவேஷ் கான், குல்தீப் சென் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதன்மூலம் 224 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் களமிறங்குகிறது.