ராஜஸ்தான் | ஆழ்துளை கிணற்றிள் விழுந்த 3 வயது குழந்தை – 8வது நாளாக தொடரும் மீட்பு பணி!
ராஜஸ்தான் மாநிலத்தில் ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த குழந்தையை மீட்கும் பணி 8வது நாளாகத் தொடர்கிறது.
ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த டிச.23 அன்று ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த குழந்தையை மீட்கும் பணி 8 வது நாளாக இன்றும் (டிச.30) தொடர்கிறது. சேத்துனா என்ற 3 வயது பெண் குழந்தை, கடந்த டிச.23 அன்று கோட்புட்லி-பெஹ்ரோர் மாவட்டத்திலுள்ள ஒரு விவசாய நிலத்திலுள்ள 700 அடி ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்தது. அந்த ஆழ்துளைக் கிணற்றின் 120 வது அடியில் சிக்கியுள்ள குழந்தையை மீட்க 8 நாளாக மீட்புப் படையினர் போராடி வருகின்றனர்.
குழந்தை விழுந்த அந்த ஆழ்துளைக் கிணற்றுக்கு அருகிலேயே 160 அடி ஆழத்திற்கு ஒரு மிகப்பெரிய குழித்தோண்டப்பட்டு அந்த குழந்தைக்கு நேராக 8 அடிக்கு ஒரு சுரங்கம் தோண்டும் பணி 8வது நாளாக இன்றும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இன்று (டிச.30) காலை 6.30 மணி நிலவரப்படி அந்த சுரங்கத்தில் 7 அடி தோண்டப்பட்டுள்ளதாக, சுற்றியும் அது பாறைகள் நிரம்பிய பகுதி என்பதினால் துளையிடும் இயந்திரங்கள் மூலமாக இடையில் இருக்கும் பாறைகள் உடைக்கப்பட்டு வருவதாகவும் மீட்புப் படை சார்பில் கூறப்பட்டுள்ளது.
இருப்பினும், 160 அடி ஆழத்தில் அதிகமான வெப்பத்தினாலும் இயந்திரம் மூலம் துளையிடும்போது உண்டாகும் தூசியினாலும் மீட்புப் படையினர் மூச்சிவிட சிரமப்பட்டு வருவதாகவும், இதனால் மணிக்கு 2 முதல் 4 அங்குலம் அளவில் மட்டுமே சுரங்கம் துளையிடப்பட முடிவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், இந்த மீட்புப் பணியில் இந்திய விமானப் படையினர் மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படையினரும் ஈடுப்பட்டுள்ளனர்.முன்னதாக, கடந்த டிச.24 அன்று குழந்தை சேத்துனாவின் உடலில் எந்தவொரு அசைவும் இல்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது. மீட்புப் படையினரின் அலட்சியப்போக்கே இந்த தாமதத்திற்கான காரணம் என குழந்தையின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.