ராஜஸ்தான் சுரங்க விபத்து: 14 தொழிலாளர்கள் மீட்பு - ஒருவர் உயிரிழப்பு!
ராஜாஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனு மாவட்டத்தில் ஏற்பட்ட சுரங்க விபத்தில் 14 தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். ஒருவர் உயிரிழந்தார்.
ராஜஸ்தானின் ஜுன்ஜுனு மாவட்டத்தில், இந்துஸ்தான் காப்பர் லிமிடெட் நிறுவனத்துக்குச் சொந்தமான கோலிஹான் சுரங்கம் உள்ளது. இந்த சுரங்கத்தில் நேற்று இரவு லிப்ட் அறுந்து விழுந்ததில் மூத்த விஜிலென்ஸ் அதிகாரிகள் உட்பட 15 பேர் சுரங்கத்தில் சிக்கினர். கொல்கத்தாவில் இருந்து வந்த விஜிலென்ஸ் குழுவை ஏற்றிச் சென்ற லிப்ட், சுரங்கத்திற்குள் கிட்டத்தட்ட 2,000 அடி ஆழத்தில் அறுந்த விழுந்ததாக கூறப்படுகிறது. விஜிலென்ஸ் அதிகாரிகள் சுரங்கத்தின் அடிப்பகுதிக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டு திரும்பிய போது லிப்டின் கம்பி அறுந்து விழுந்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து தகவலறிந்து வந்த மீட்புக்குழுவினர் அவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக இறங்கினர். ஆனால் இரவு 8 மணியளவில் இந்த விபத்து நடந்ததாக கூறப்பட்ட நிலையில், மீட்பு பணிகளை மேற்கொள்வதற்கு சிரமமாக இருந்தது.
இதையடுத்து அதிகாலை முதலே மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டன. அதன் விளைவாக சுரங்கத்தில் சிக்கியவர்களில் 14 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். ஒருவர் மட்டும் உயிரிழந்த நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். சிலருக்கு கால் மற்றும் முழங்கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும், காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.