ராஜஸ்தான் | ஆழ்துளை கிணற்றிள் விழுந்த 3 வயது குழந்தை - 4வது நாளாக தொடரும் மீட்பு பணி!
ராஜஸ்தானில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்க மீட்பு படையினர் 4 நாட்களாக போராடி வருகின்றனர்.
கோட்புட்லி-பெஹ்ரோர் மாவட்டத்திலுள்ள விவசாய நிலத்தில் கடந்த டிச.23ம் தேதி சேத்துனா (3) என்ற பெண் குழந்தை 700 அடி ஆழ்துளைக் கிணற்றுக்குள் தவறி விழுந்தது. அந்த ஆழ்துளைக் கிணற்றின் 150வது அடி ஆழத்தில் சிக்கியுள்ள குழந்தையை மீட்கும் பணி 4 வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
இதற்க்கு முன் குழந்தையை மீட்டெடுக்க அனைந்து முயற்சிகளும் தோல்வியில் முடிவடைந்தது. தொடர்ந்து, இதைப்பற்றி தேசிய பேரிடர் மீட்புப் படையினரின் அதிகாரி யோகேஷ் மீனா கூறுகையில், ஆழ்துளைக் கிணற்றுக்கு அருகில் 160 அடி ஆழத்திற்கு மற்றொரு குழி தோண்டவுள்ளதாகவும், அதிலிருந்து குழந்தைக்கு நேராகச் சுரங்கம் ஒன்று தோண்டி அக்குழந்தையை மீட்கவுள்ளதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து, குழந்தை தவறி விழுந்த ஆழ்துளைக் கிணற்றுக்கு அருகில் 160 அடி ஆழத்திற்கு மற்றொரு குழி தோண்டப்பட்டதாகவும், 155 ஆவது அடியில் ஒரு பாறை இருந்ததினால் குழித்தோண்டும் பணி தாமதாமானதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், மீட்புப் பணிக்கு தேவையான பொருள்களை அந்த இடத்திற்கு கொண்டு செல்வது மிகுந்த சவாலான ஒன்றாக இருந்ததினாலும், குழித்தோண்டும் இயந்திரத்தை அங்கு கொண்டுச் செல்ல சில மின்கம்பங்கள் அகற்றப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டது எனவும் அந்த குழித்தோண்டும் பணி முடிந்தவுடன் குழந்தைக்கு நேராக சுரங்கம் ஒன்று தோண்டி சேத்துனா மீட்கப்பட உள்ளதாக அவர் கூறினார்.
இதனைத் தொடர்ந்து, எலி வளை சுரங்கத் தொழிலாளர்களை அழைத்து 160 அடி ஆழத்தில் குழந்தைக்கு நேராகச் சுரங்கம் தோண்டும் பணி ஆரம்பித்துள்ளார்கள். எலி வளை சுரங்கத் தொழிலாளர்கள் இதற்கு முன் உத்தரகாண்ட மாநிலத்தில் ஏற்பட்ட தொழிலாளர் சுரங்க விபத்தின் போது சுரங்கம் தோண்டி அவர்களை மீட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மருத்துவர்கள் சேத்துனாவை உடல் பரிசோதனை செய்ய ஆழ்துளைக் கிணற்றுக்குள் அனுப்பப்பட்ட கேமராவின் காட்சிகளின் அடிப்படையில் பார்த்த போது குழந்தையின் உடலில் கடந்த 2 நாட்களாக எந்தவொரு அசைவும் இல்லை எனத் தெரிவித்தார்கள். சேத்துனாவின் குடும்பத்தார்களும், கிராம மக்களும் மீட்புப் பணியாளர்கள் தாமதமாகச் செயல்படுவதாகக் குற்றம்சாட்டி வருகின்றனர்.