இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்சே சகோதரர்களே காரணம் - இலங்கை நீதிமன்றம் குற்றச்சாட்டு
இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்சே சகோதரர்களே காரணம் என இலங்கை நீதிமன்றம் குற்றச்சாட்டியுள்ளது.
கடுமையான பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையில் அதற்கு பொறுப்பேற்று பதவி விலகுமாறு மக்கள் தீவிரப் போராட்டங்கள் நடத்தியதன் தொடர்ச்சியாக அதிபர் பதவியை விட்டு கோத்தபய ராஜபக்சே ராஜிநாமா செய்தார் .
முதலில் மாலத்தீவுகள், அதைத் தொடர்ந்து சிங்கப்பூர் பின்னர் அங்கிருந்து தாய்லாந்துக்குச் சென்றார் ராஜபக்சே.
இதனை தொடர்ந்து நடைபெற்ற அதிபர் தேர்தலில் மும்முனை போட்டி நிலவிய நிலையில் எம்.பிக்களின் ஆதரவைப் பெற்று இடைக்கால அதிபர் ரணில் விக்கிரமசிங்க வெற்றி பெற்றார்.
இந்த நிலையில் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே, அவரது சகோதரரான மஹிந்த ராஜபக்சே, முன்னாள் நிதியமைச்சரான பசில் ராஜபக்சே உள்ளிட்டவர்களே பொறுப்பு என இலங்கை உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோரி இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் சந்திரா ஜயரத்ன உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை ஐந்து பேர் கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விசாரித்தனர். இந்த விசாரணையில் இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்சே சகோதரர்கள் மற்றும் அப்போதைய வங்கி அதிகாரிகளே காரணம் என குற்றம்சாட்டினர்.