#RainAlert | எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை? - முழுவிவரம் இதோ!
வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு, சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்தாண்டை விட இந்தாண்டு தென்மேற்கு பருவமழை அதிகமாகவே இருந்தது. அதுபோல இந்தமுறை வடகிழக்கு பருவமழையும் இயல்பை விட அதிகமாக பெய்ய வாய்ப்புள்ளது எனவும், வடதமிழகத்தில் இயல்பை விட அதிகமாகவும், தென்தமிழகத்தில் இயல்பைவிட குறைவாகவும் மழைபொழிய வாய்ப்புள்ளது என தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு இன்று (அக். 15) மிக கனமழைக்கான எச்சரிக்கையும், நாளை (அக்.16) அதி கனமழைக்கான ரெட் அலர்ட்டும் (Red Alert) விடுக்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்கனவே சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
அதேபோல, கடலூர் மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (அக். 15) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சித் தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார். தொடர் மழை காரணமாக இன்று விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என மாவட்ட ஆட்சித்தலைவர் பழனி அறிவித்துள்ளார்.
கோயம்புத்தூரில் மழையின் காரணமாக அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் இன்று மதியம் வரை மட்டும் இயங்கும் என மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி அறிவித்துள்ளார்.
கன மழை எச்சரிக்கை காரணமாக சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்று நடைபெற இருந்த பல்கலைக்கழக தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் கடலூர் மாவட்டத்தில் உள்ள உறுப்பு கல்லூரி தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஒத்திவைக்கப்பட்ட தேர்வு தேதிகள் பின்னர் அறிவிக்கப்படுவதாகவும் பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.