#RainAlert | காலை 10 மணி வரை எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு?
தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களிலும் தென் மாவட்டங்களில் அனேக இடங்களிலும், வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.தமிழ்நாட்டில் நவ.9 ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, விழுப்புரம், கடலூர், திண்டுக்கல், திருப்பூர், ஆகிய 4 மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் இன்று காலை 10 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.