#RainAlert | காலை 10 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?
தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தெற்கு கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இது கிழக்கு திசை காற்றை தமிழக நிலப்பரப்பு வழியாக ஈர்க்கும் என்பதால் டிசம்பர் 28ஆம் தேதி முதல் ஜனவரி 2 ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் ஒரு சில பகுதிகளிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படியுங்கள் : விஜயகாந்த் நினைவு தினம் – #DMDK பேரணிக்கு அனுமதி மறுப்பு!
மேலும், இன்னும் 3 நாட்களில் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான பிறகு அடுத்த 3 நாட்களில் அது மேற்கு திசையில் தென்மேற்கு வங்கக்கடலில் தெற்கு இலங்கை நோக்கி நகரக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது. மேலும் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் பனிப்பொழிவு, குளிர், வெயில், மழை என வானிலை மாறி மாறி காணப்படும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்களின் பட்டியலை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, கடலூர், சேலம், திருவள்ளூர் ஆகிய 5 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.